மக்கள் கூச்சலிட்டும் கேட்காத ஓட்டுநர்: காரை அடித்துச்சென்ற காட்டாற்று வெள்ளம்; 3 பேர் பலி

மகாராஷ்டிராவில் பாலத்தை கார் கடக்க முயன்ற போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை – வெள்ளத்துக்கு இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். பல நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகின்றன.
image
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பீட்டல் மாவட்டத்தில் உள்ள முல்ட்டாய் நகரைச் சேர்ந்த 8 பேர் நாக்பூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்தனர். பின்னர் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு, இன்று அதிகாலை மீண்டும் முல்ட்டாய் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நாக்பூரின் சாவ்னேர் பகுதியில் வந்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. எனினும், அந்த பாலத்தை அவர்களின் கார் கடந்து செல்ல முயன்றது. அப்போது அப்பகுதியில் இருந்த மக்கள், பாலம் அருகே வர வேண்டாம் என திரும்பிச் செல்லுமாறு கூறினர். ஆனால், காரை ஓட்டியவர் அதனை பொருட்படுத்தாமல் தரைப்பாலத்தை கடக்க முயன்றார். இதில் பாதி பாலத்தை மட்டுமே காரால் கடக்க முடிந்தது. வெள்ளம் அதிகமாக இருந்ததால் மேற்கொண்டு காரால் செல்ல முடியவில்லை. இதனால் அச்சமடைந்த ஓட்டுநர், காரை பின்புறமாக எடுக்க முற்பட்டார். அந்த சமயத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். ஆனால் ஆற்று நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கரையில் இருந்தவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இருந்தபோதிலும், காரில் இருந்த 2 பேர் ஜன்னல் வழியாக வெளியேறி நீந்தி கரை சேர்ந்தனர். ஆனால் மீதமுள்ள காருடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு வந்து கிரேன் உதவியுடன் காரை மீட்டனர். இதில் ஒரு பெண் உட்பட 3 பேரின் உடல்கள் காருக்குள் இருந்து மீட்கப்பட்டன. எஞ்சிய 3 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Nagpur, where the Scorpio car was washed away in the sudden flood in which 8 people were aboard.#Monsoon2022 #monsoon #rainhavoc pic.twitter.com/3yLpucMxlD
— Preeti Sompura (@sompura_preeti) July 12, 2022

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.