மறக்க முடியாத மஞ்சள் சால்வை – வைரமுத்து #AppExclusive

ன் முகத்தைத் தானே தொலைத்து அலையும் இளைய சமூகத்துக்கு உங்கள் அறிவுரை என்ன? இளைஞர்களே! பணிவில்லாத அறிவு உங்களைச் சிதைத்துவிடும்; அறிவில்லாத பணிவு உங்களைப் புதைத்துவிடும். அறிவில் மதிக்கப்படுவீர்கள் பணிவில் நேசிக்கப்படுவீர்கள். அறிவும் பணிவும் கொண்டு அடுத்த நூற்றாண்டை உழைப்பால் வென்றெடுங்கள். 

சுவாமிநாதன், மன்னார்குடி 

* அரிய பொக்கிஷம் என்று எதையாவது பாதுகாத்து வைத்திருக்கிறீர்களா?

‘முதல் மரியாதை’க்கு எனக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. அப்போது எம்.ஜி.ஆர். முதலமைச்சர், நான் ராமாவரம் போகாமல் கோபாலபுரம் போனேன். கலைஞர் எனக்கொரு சால்வை அணிவித்தார். அதை இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். சால்வையின் நிறம் – மஞ்சள். 

Vairamuthu answers common people’s questions

காசி இராஜகோபாலன், தஞ்சை

* உங்களைப் போன்றவர்கள் இந்த சமூகத்தின் மீது கோபம் வந்தால் பேனாவை எடுக்கிறீர்கள்… படிப்பறிவு இல்லாதவர்கள் அரிவாளை எடுக்கிறார்கள்…. சரிதானே கவிஞரே?

இல்லை; சரியில்லை. அரிவாளை எறிந்து விட்டு பேனா எடுத்ததால்தான் என் பதிலை மதித்து நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்.

ஆரி, ஷம்மு, குடந்தை 

* சென்ற தலைமுறைக் கவிஞர்களிடம் நீங்கள் கற்ற பாடம்.? 

சொந்தத்தில் படம் எடுக்கக்கூடாது என்பது 

* மரபுக் கவிஞர்களில் தங்கள் மனம் கவர்ந்த கவிஞர்கள்… 

கருத்தில் வள்ளுவர்; கதையில் இளங்கோ;  வளமையில் கம்பன்;  புலமையில் காளமேகம்; புதுமையில் பாரதி; புரட்சியில் பாரதிதாசன்; எளிமையில் கண்ணதாசன். 

Vairamuthu answers common people’s questions

ரஜினி முருகன், சின்னாளபட்டி

“அண்ணாமலையில் ‘வந்தேன்டா பால்காரன்…’ ‘பாட்ஷாவில் ‘ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்…” ‘முத்து’வில் ‘ஒருவன் ஒருவன் முதலாளி..’ ‘அருணாச்சலம்’ படத்தில் ‘அதான்டா இதான்டா…’ இந்த மெகா ஹிட் வரிசையில் ‘படையப்பா’வில் ரஜினிக்கு உங்கள் ஸ்டைலில் எழுதிய முத்திரைப் பாடல் எது?

சில அரசியல் ரகசியங்களை ஜூ.வி. உடைப்பது மாதிரியே ‘படையப்பா’ பாட்டு ரகசியத்தையும் உடைக்கிறது. பரவாயில்லை… பாடல் வெளிவரும் நாள் நெருங்கிவிட்டது. இதோ – இதுதான் ‘படையப்பா’வில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்திரைப் பாட்டு.

தொகையறா ‘சிங்கநடை போட்டுச் சிகரத்தில் ஏறு சிகரத்தை அடைந்தான் வானத்தில் ஏறு பல்லவிஎன் பேரு படையப்பாஇளவட்ட நடையப்பா என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்கப் படையப்பா நெஞ்சில் ஆறு படையப்பாபின்னால் நூறு படையப்பாயுத்தம் ஒண்ணு வருகையில்பத்து விரல் படையப்பாபாசமுள்ள மனிதப்பா – நான் மீச வச்ச குழந்தையப்பாநல்லதம்பி நானப்பாநன்றியுள்ள ஆளப்பாதாலாட்டி வளர்த்ததுதமிழ்நாட்டு மண்ணப்பா! கதிர்வேள், வேலூர்-6. கவிதையில் கண்ணதாசனை உண்மையிலேயே நீங்கள் மிஞ்சியிருக்கிறீர்களா… நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் கவிஞரே?

வள்ளுவரை இளங்கோ மிஞ்சியிருக்கிறாரா? பாரதியாரை பாரதிதாசன் மிஞ்சியிருக்கிறாரா?

Vairamuthu answers common people’s questions

இரா.ரவிச்சந்திரன், சிந்தாமணிக்குப்பம்

* உங்கள் கண்கள் எப்போதும் சிவப்பாக இருக்கிறதே… மது அருந்துவீர்களா? தூக்கம் விழித்துச் சிவந்த கண்கள் அவை. என் வாழ்க்கையில் நான் மதுவைத் தொட்டதேயில்லை; தொடப் போவதுமில்லை. உதயத்திலும் அஸ்தமனத்திலும் சூரியன் சிவந்திருக்கிறதே. அது என்ன தண்ணியடித்த சூரியனா?

ஏ.ஆர்.மாரிட்டின் திருமானூர்

* நீங்கள் மார்க்கெட் நல்லபடியாக உள்ள நடிகர்களாகத் தேர்ந்தெடுத்து பாடல்கள் எழுதுகிறீர்கள் என்று என் நண்பன் சொல்கிறான். பார்த்தால் அதுவும் சரிதான் என்று தோன்றுகிறது. தங்கள் கருத்து..?

நடிகர்களையும் இயக்குநர்களையும் நான் தேர்ந்தெடுப்பதில்லை. நடிகர்களும் இயக்குநர்களுமே என்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கிரிக்கெட் மட்டை விற்கும் கடைக்காரனைப் போல் நான் எல்லோருக்கும் ஒரே தரத்தில்தான் மட்டை விற்கிறேன். வாங்கிச் செல்கிறவர்களில் சில பேர்களே ‘டெண்டுல்கர்’களாக இருக்கிறார்கள்.

Vairamuthu answers common people’s questions

ப. ராமகிருஷ்ணன், காயக்காடு

* கலைஞரின் குங்குமப் பொட்டு பிரச்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? குங்குமப் பொட்டு பற்றிக் கலைஞர் பேசியது பகுத்தறிவு வட்டத்தில் நின்று பேசிய பேச்சு. அங்கே அது அவர் கடமை; அதை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் அவரவர் உரிமை.

காசி இராஜளேபாலன், தஞ்சை

* எம்.ஜி.ஆர். படங்களுக்குப் பாடல்கள் எழுதக் கொஞ்சம் முந்திப் பிறந்து திரையுலகுக்கு வரவில்லையே என்று வருந்தியதுண்டா?

உண்டு. ஒரு கவிஞன் கவியுலகத்துக்கு என்ன கொடுத்திருக்கிறான் என்பதை விடவும், கருத்துலகத்துக்கு என்ன கொடுத்திருக்கிறான் என்பதைத்தான் காலம் கணக்கிலெடுத்துக் கொள்கிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படப் பாடல்களில் தமிழும் கருத்தும் நுரைத்துக் கொண்டோடின. அவர் படத்துக்குப் பாட்டெழுத வயதில்லாத நான், அவருக்காக எழுதியது இரங்கற்பா மட்டும்தான்.

பொன்.சீனிவாசன், வெண்ணந்தூர்,

* வடுகபட்டியாரே வணக்கம். திராவிடர் இயக்கம் 1949, 1972, 1993 ஆண்டுகளில் பிளவுபட்டன. அவை பிளவுபடக் காரணம் என்ன? பிளவுபடாமல் இருந்திருந்தால் இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்னவாக இருந்திருக்கும்?.

முட்டை முதிர்ந்தால் ஓடு உடைந்தே தீரும்; இயக்கம் வளர்ந்தால் அது பிளந்தே தீரும்.இது இயக்கங்களின் இயக்க விதி.கிளை விடுவது மரத்தின் வளர்ச்சியேயன்றி வீழ்ச்சி அல்ல. ஆனால், பிளவுகளில் இரண்டு வகை. ஒன்று – தத்துவப் பிளவு; இன்னொன்று – தனி மனிதப் பிளவு. இந்த இரண்டு பிளவுகளுமே திராவிட இயக்கங்களுக்கு நேர்ந்திருக்கின்றன (61-ல் நிகழ்ந்த இன்னொரு பிளவை மறந்துவிட்டீர்கள்). திராவிட இயக்கம் பிளவுபடாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் நிலை என்னவாக இருந்திருக்கம் என்று கேட்கிறீர்கள்.தமிழ்நாட்டுப் பொதுவாழ்க்கையில் இத்தனை சுறுசுறுப்பு இருந்திருக்காது ; ஜூனியர் விகடனுக்கும் இத்தனை பரபரப்பு இருந்திருக்காது.

எஸ். ரத்தினசாமி, நீலாங்கரை

* தாங்கள் குடும்பத்துடன் ரசித்துப் பார்த்த ஆங்கிலத் திரைப்படம் எது?

டைட்டானிக். பினங்கள் மிதந்த தண்ணீரில் எங்கள் மனங்கள் மிதந்ததை மறக்க முடியுமா?

மௌனம் இரமேசு, பொள்ளாச்சி.

* “நறுமுகையே நறுமுகையே..’ பாடலில் முதல் சரணத்தின் ஈற்றடிகளில் “நொந்தேன்’, ‘இளைத்தேன்”, பொறுக்கவில்லை இடையில் “மேகலை இருக்கவில்லை” என்று எழுதியிருக்கிறீர்கள். அந்தப் பாடலில் தலைவி மேகலை அணிந்திருந்தாளா? அல்லது அணிந்த மேகலை அறுந்து வீழ்ந்துவிட்டதா? எப்படிப் பொருள் கொள்ள?

மரபின் பாவனை அது. அவள் மேகலை அணிந்திருக்கிறாள். விரகதாபத்தில் இளைக்கிறாள். இளைத்ததால் இடுப்புக்கும் மேகலைக்கும் இறுக்கமில்லை. அதனால் இடையில் அது தொடர்ந்து இருக்கவில்லை. ஓர் ஐயம்: நீங்கள் அஞ்சல்வழிக் கல்வியில் தமிழ் படிக்கிறீர்களா? அல்லது அஞ்சல்வழியில் காதலிக்கிறீர்களா?

* ‘ஹவுஸ்ஃபுல்’ படத்தில் இடம்பெறும் (மிஸ் 2000) சுவரொட்டியில் பார்த்திபன் உங்களையும் இளையராஜாவையும் இணைத்திருப்பது பற்றி?

அது – ‘பார்த்திபன் கனவு’.

Vairamuthu answers common people’s questions

பி.எம். நாகேந்திரன், ஓசூர்.

* சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் ஈடுபட்டால் அதை நீங்கள் வரவேற்பீர்களா?

ஒரு தலைவனின் அரசியலை வரவேற்பதற்கு அடிப்படைக் காரணம் அன்போ நட்போ அல்ல. கொள்கை! கொள்கைதான் காரணம். முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும். இயக்கத்துக்குப் பெயர் சூட்டட்டும். இயக்கத்தின் கொள்கைகள் இவை இவை என்று கோடு போடட்டும். வரவேற்பதா, இல்லையா என்ற உங்கள் கேள்விக்கான பதிலை என் பேனா அதன் பிறகு எழுதட்டும்.

ப. ராமகிருஷ்ணன், காயக்காடு

* தங்களின் மகன் கபிலன் கவிதையில் அசத்துகிறார். தங்களைப் போல் அவரும் கவிதையில் ஜொலிப்பாரா?

முதலில் வயதில் என்மீது விழுந்த பார்வை பதினைந்து வயதிலேயே கபிலன் மீது விழுந்திருக்கிறது.அது அவனது பலம், அதுவே பலவீனம்.அவநம்பிக்கையைப் போலவே மிகை நம்பிகைக்யும் ஆபத்தானது.ஆனால், வயதுக்கு மீறிய அவனது நிதானம் என்னை வியக்க வைக்கிறது.‘ஆனந்த விகடன்’ பேட்டி கேட்ட போதே ’நான் ஒன்றும் சாதிக்கவில்லையே’ என்று நாகரிகமாக மதித்து மறுத்திருக்கிறான்.முதல்லி அவன் வேர் விடட்டும், வளர்வதற்கு வானமே இருக்கிறது.

சிவராஜ், அரச்சலூர்.

* இந்தியாவின் அணுகுண்டு சோதனையை வரவேற்கிறீர்களா?

வரவேற்கிறேன். இந்தியா தன் சுதந்திரப் பொன் விழாவை உலகத்தின் செவிகளுக்குக் கேட்குமாறு வெடிவெடித்துக் கொண்டாடி இருக்கிறது. இந்தியா என்றாலே – பக்கிரிகள், பல்லக்குகள், அழுக்குச் சிறுவர்கள், பட்டினிச் சாவுகள்; ஊரெல்லாம் சேரிகள், ஒரே ஒரு தாஜ்மகால்; பிச்சைக்காரர்கள் பிச்சைக் காரர்களைச் சுற்றிக் கோயில்கள்; மனிதர்களைவிட வசதியாக இருக்கும் மிருகங்கள் அங்கங்கே மேலாடையின்றிக் காட்சி தரும் இலவச மார்பகங்கள்; பழைய கற்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை முறைகள்… இந்தியாவைப் பற்றி மேற்கு நாடுகள் இப்படித்தான் எண்ணிக்கொண்டிருந்தன. இந்தியாவைப் பற்றி இப்படித் திட்டுத்திட்டாய்ச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறிந்து விட்டது இந்த அணுகுண்டு சோதனை. ‘பாரத ரத்னா அப்துல் கலாமு’க்குப் பாராட்டுக்கள்.

திருமதி கிரிஜா பகவதிராஜன், மதுரை.

* ஒரே ஒரு நகைச்சுவை… ப்ளீஸ்…

ஆங்கிலம் படிக்கப்போன தமிழ்ப்பிள்ளைகள் அம்மாவை ‘மம்மி’ என்றார்கள். ‘மம்மி’ சுருங்கி இப்போது என்றாகிவிட்டது. ஒரு குழந்தையை ஒருவர் கேட்டாராம். – ‘அம்மாவை ‘மம்’ என்கிறீர்கள்… பெரியம்மா – சின்னம்மாவை என்ன சொல்வீர்கள்? குழந்தை சொன்னதாம். ‘பெரியம்மா – மேக்ஸி‘மம்’, சின்னம்மா மினி‘மம்”- இது கோவில்பட்டி சமூக இலக்கியப் பேரவைத் தொடக்க விழாவில் ‘நகைச்சுவைத் தென்றல்’ கு.ஞானசம்பந்தன் சொல்லியது. மேடையில் சிரித்தேன்; விமானத்திலும் சிரித்தேன்; வீட்டுக்கு வந்தும் சொல்லிச் சிரித்தேன்.

Vairamuthu answers common people’s questions

பொன்.சீனிவாசன், வெண்ணந்தூர்

* பகுத்தறிவாளர் என்று காட்டிக்கெள்ள்ள பெரியார் திடல் நட்பு… சினிமாவில் வெற்றிபெற நடிகர் ரஜினிகாந்த் சிநேகம், ஆளுங்கட்சி தயவுவேண்டி கலைஞர் புகழ்மாலை, மூப்பனார் நட்பு என்று எத்தனை முகம் உங்களுக்கு?

ஒரே முகம்தான் உண்மை முகம். ஒரு மனிதன் எத்தனை பேரோடு நட்பாக இருக்கிறான் என்பது முக்கியமல்ல. எத்தனை பேரோடு நட்பிருந்தாலும் தன் தனித்தன்மையை இழக்காமல் இருக்கிறானா – தன் தனித்தன்மையைக் காட்டிக்கொள்வதற்காக மற்றவர் தனி வாழ்க்கையைப் பாதிக்காமல் இருக்கிறானா என்பதே முக்கியம். நான் அப்படி இருப்பதாக நம்புகிறேன். உங்கள் கேள்விக்கு நேரடியாகவே வருகிறேன். நான் எளியவன், எல்லோரையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்கிறவன். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட மாபெரும் மனிதர்கள் யாரும், எடைபோடாமல் யாரையும் ஏற்றுக்கொள்கிற ஏமாளிகள் அல்லர்.

எஸ். இந்துமதி நெய்வேலி

* சில நேரங்களில் நீங்கள் விளம்பர போதைக்கு அடிமையாகிவிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். உண்மைதானே?

சகோதரி! விளம்பரத்துக்கும் புகழுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் எனக்கு. ஓர் உதாரணம் சொல்கிறேன் உனக்கு. சென்னை எழும்பூரில் ரயிலேறுகிறேன். அலையலையாக இளைஞர்கள் வந்து ஆட்டோகிராப் கேட்கிறார்கள். ரயில் செங்கல்பட்டை அடைகிறது. அங்கே – கவுண்டமணி ஏறுகிறார்; நான் மறக்கப்படுகிறேன். ஆட்டோகிராப் அலை அவர் பக்கம் பாய்கிறது. வண்டி விழுப்புரம் போகிறது. அங்கே நடிகை ரம்பா ஏறுகிறார்; கவுண்டமணி மறக்கப்படுகிறார். ஆட்டோகிராப் அலை ரம்பாவுக்குத் தாவுகிறது. ரயில் திருச்சி அடைகிறது. அங்கே நடிகர் விஜய் ஏறுகிறார்; ரம்பா மறக்கப்படுகிறார். ஆட்டோகிராப் அலை இப்போது திசைமாறி அடிக்கிறது. இதுதான் இயல்பென்று கருதுகிற நான் எப்படி போதை பெறுவேன்? புயலில் உயரமாகிற அலைகள் மாதிரி விளம்பரம். அலை ஓய்ந்த ஆழ்கடல் போல் மெளனமானது புகழ். மனிதன் கூட்டுறவால் விளம்பரம் பெறுகிறான்: தனிச் செயல்களால் புகழ் பெறுகிறான். விளம்பரம் சாராயம் போல. புகழ் தாய்ப்பால் போல. நான் சாராயம் விரும்பவில்லை; தாய்ப்பாலுக்குப் போதை இல்லை.

Vairamuthu answers common people’s questions

சு பாண்டித்துரை, மதுரை.

* கலைஞரிடம் நீங்கள் பெரிதும் மதிப்பது எதை?

அவர்தம் கூர்ந்த மதியை. இந்த வாரம் நிகழ்ந்த ஒரு சம்பவம் சொல்கிறேன். கலைஞரோடு அமர்ந்து ‘கள்ளழகர்’ படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு காட்சி. தீவிரவாதிகளின் தீவிரம் குறைக்க ஒரு பெரியவர் மூன்று புத்தகங்கள் வழங்குகிறார். ஒன்று: பைபிள்; இரண்டு குர்-ஆன், மூன்று: பகவத்கீதை, அந்தக் காட்சி நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே கலைஞர் என் பக்கம் திரும்பிச் சொன்னார்: “போர் செய்யச் சொன்ன புத்தகமல்லவா பகவத்கீதை. ‘திருக்குறள்’ அல்லவா தந்திருக்க வேண்டும்? நான் வியந்துபோனேன். குளோனிங் செய்யப்படவேண்டிய கூர்ந்தமதி கலைஞருக்கு

என். கிறிஸ்டோபர், தஞ்சை

* ‘ரஜினி – கமல் ’ என்ன வித்தியாசம்?

வெள்ளித்திரைக்கு முன்னால் இருப்பவர்களைப் புரிந்துகொண்டவர் ரஜினி. வெள்ளித்திரைக்குப் பின்னால் இருப்பவர்களைப் புரிந்து கொண்டவர் கமல்,

ஆர். செந்தில்குமார், மங்கலம்புதூர்

* உண்மையாகவே கவிஞன் தீர்க்கதரிசியா?

உங்களுக்கு ஓர் இந்திக் கவிதையைத் தமிழில் சொல்கிறேன். (மொழிபெயர்ப்பு: பேராசிரியர் கோவை ரமணி)

‘நாளை நாளை என்று சொல்லியே இன்றுள்ளதெல்லாம் கடந்துவிட்டது கடந்த காலத்து நினைவிலே எதிர்காலத்துக் கனவிலே நிகழ்காலத்தை இழந்துவிட்டோம். கண்காணிப்புகள் பயனற்றுப் போயின ரசம் நிறைந்த நதி வற்றிப் போய்விட்டது வாழ்வும் கழிந்தது. லாபம் நஷ்டமெனும் தராசுத் தட்டுகளில் வாழ்வும் கழிந்தது. விற்றவன் விலை பெற்றான்; விற்காதவனுக்கு நஷ்டமாகிவிட்டது. சந்தையில் என்னைத் தவிக்கவிட்டு ஒவ்வொரு நண்பராய்ச் சென்றுவிட்டார்”

இந்தக் கவிதை இடம்பெற்ற நூலின் பெயர் – ‘என் கவிதைகள் ஐம்பத்தொன்று.’ கவிஞரின் பெயர்: அடல்பிகாரி வாஜ்பாய். கவிதை எழுதிய காலம்: பிரதமராவதற்கு முன் இப்போது சொல்லுங்கள். ஒரு கவிஞன் தீர்க்கதரிசியா இல்லையா?

ந வந்தியக்குமாரன், சென்னை-41.

* ஐஸ்வர்யாராய் 50 கிலோ தாஜ்மகால் என்று எப்படித் தெரியும் உங்களுக்கு?

தெரியாது. ஓர் அனுமானத்தால் தப்பான தகவல் தந்துவிட்டேன். ‘நான் 55 கிலோ தெரியுமா’ என்றார் ஐஸ்வர்யாராய் என்னிடம், ‘என் பாடலைப் பொய்யாக்கி விடாதீர்கள். 5 கிலோ குறைத்துக் கொள்ளுங்கள் என்றேன். சில்லென்று சிரித்தார். மீண்டும் பார்க்கும்போது கேட்க வேண்டும்.

Vairamuthu answers common people’s questions

எஸ்.ஏ. தாண்டவன், செந்தாரப்பட்டி

* “எல்லா நதியிலும் என் ஒடம்” என்று ஒரு நூலுக்குப் பெயர் வைத்திருக்கிறீர்கள். பிழையல்லவா..? “எல்லா நதிகளிலும்.” என்றல்லவா இருந்தி வேண்டும்?

‘வேறுள குழுவையெல்லாம் வென்றதம்மா’ – என்று கம்பன் எழுதியிருக்கிறான். ‘வேறுள குழுக்களையெல்லாம்’ என்றல்லவா இருந்திருக்க வேண்டும்? உங்கள் கருத்துப்படி கம்பன் செய்தது பிழையா? இன்னும் கொஞ்சம் பின்னால் போகிறேன். ‘எல்லா விளக்கும் விளக்கல்ல’ – என்று வள்ளுவர் எழுதியிருக்கிறார். உங்கள் கருத்துப்படி “எல்லா விளக்குகளும் விளக்குகளல்ல’ என்றல்லவா இருந்திருக்க வேண்டும்? வள்ளுவர் செய்ததும் பிழையா? பாட்டன்கள் செய்த பிழையையே பேரனும் செய்யப் பிரியப்படுகிறேன்.

மாணிக்ப்ரபா, இடைப்பாடி

* நீங்கள் அண்மையில் ரசித்த ஒரு கவிதை?

மலையாளக் கவிஞர் அய்யப்ப பணிக்கரின் ‘வீடியோ மரணம்’ என்ற கவிதை. வெளிநாட்டில் சம்பாதிக்கப் போன மகன் இந்தியாவில் மரணப்படுக்கையிலிருக்கும் தாய் குறித்துக் கடிதமெழுதுகிறான்; அதுதான் கரு. தனக்கு விடுமுறை இல்லையென்றும் முடிந்தால் அந்த மரணத்தைத் தள்ளிப்போடுங்கள் என்றும் அந்தக் கவிதை தொடங்குகிறது. ‘ஒருவேளை நான் வாராது போனால் மரணச் சடங்கின் வீடியோ தேவை இந்திய மரணம் பார்த்ததில்லையாம் அமெரிக்க நண்பர் யாரும் உதவும் அவர்களுக்கு’ – கவிதை இப்படி முடிகிறது; கண்ணில் நீர் கனக்கிறது.

சோனா மாரியப்பன், கோவை,

* ஜெயலலிதாவை நீங்கள் தவிர்க்கிறீர்களா? ஜெயலலிதா உங்களைத் தவிர்க்கிறாரா?

தவிர்க்கவுமில்லை; சந்திக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை. ‘நான் கலைஞர் மீது அன்பு கொண்டவன்’ என்று தெரிந்த பிறகும்கூட என் தேசிய விருதுகளுக்குத் தந்தியும் கடிதமும் அனுப்பி வாழ்த்தியிருக்கிறார் அவர். நானும் நன்றிக் கடிதம் எழுதியிருக்கிறேன். அது சரி…. அவரும் நானும் சந்திப்பதோ சந்திக்காமல் இருப்பதோ சரித்திரத்தை மாற்றும் சம்பவமா என்ன?

Vairamuthu answers common people’s questions

சந்திரமதி, வள்ளியூர்.

* நான் தேர்வில் மூன்று முறை தோற்றுவிட்டேன் வாழவே பிடிக்கவில்லை. தற்கொலை செய்துகொண்டு விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.?

கோழைப் பெண்ணே! உன் குணம் திருத்து. வெற்றி என்ற மாடி அடையத் தோல்விகளே படிக்கட்டுகள். மூன்றே மூன்று தோல்விகளுக்கா நீ முகஞ்சுழிக்கிறாய்? ஒரு செய்தி சொல்கிறேன் உனக்கு. ‘குளோனிங்’ முறையில் ஆடு தயாரித்துவிட்டது விஞ்ஞானம். ஒரே பசுவிலிருந்து எட்டுக் கன்றுகள் தயாரித்து விட்டது விஞ்ஞானம். ஆனால், இதுவரை குரங்கிலிருந்து ஒரு குரங்கைக் குளோனிங் செய்ய முடியவில்லை. இதில் அமெரிக்க விஞ்ஞானிகள் தொடர் தோல்விகளைச் சந்தித்திருக்கிறார்கள். எத்தனை தோல்விகள் தெரியுமா? 135 தோல்விகள். ஆனாலும் ‘ரிச்சர்ட் சீட்’ என்ற அமெரிக்க விஞ்ஞானி இன்னும் இரண்டே ஆண்டுகளில் குரங்கிலிருந்து குரங்கை குளோனிங் செய்துவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். குரங்கிலிருந்து குரங்கு செய்யும் சூத்திரம்தான், மனிதனிலிருந்து மனிதன் செய்யும் சூத்திரம். தோல்விகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது வெற்றியின் விலையும் அதிகமாகும். ஆகவே பெண்ணே! இன்னும் கொஞ்சம் தோல்வி பெறு. பிறகு தோல்விகளை எருவாக்கு; வெற்றிகளை உருவாக்கு.

கி. முருகன், மாப்பிள்ளைக்குப்பம்.

* இந்தியா போன்ற ஏழை நாட்டில் செயற்கைக்கோள் அவசியமா?

கடல்வழிச் சேர – வானிலை தெளிய – தொலை தொடர்பு கொள்ள – ராணுவம் காக்க – மண்ணின் மடியில் கனிமவளம் அறிய ஒளி ஒலிபரப்ப – அண்ட்வெளியில் பூமிக்கு நேரும் ஆபத்து அறிய – வானம் அளக்க – வரும் பொருள் உரைக்க – எந்த நாட்டுக்கும் செயற்கைக்கோள் தேவை. இந்தியா பூமியில் ஏழையாக இருக்கலாம்; வானத்தில் ஏழையாக இருக்கக்கூடாது.

ஆர்.மனோகரன் தேவாரம்,

* எல்லாத் தரப்பிலும் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டாரா?

மாநகராட்சி ஏற்றுக்கொண்டு விட்டது. கட்சி ஏற்றுக்கொள்ளும் காலம் கனிகிறது. மக்கள் ஏற்றுக் கொள்ளும் திசை எதுவென்று அவருக்குத் தெரிகிறது.

Vairamuthu answers common people’s questions

எஸ். பரமசிவம், கள்ளக்குறிச்சி.

* பாட்டுக்குப் பணம் வாங்குவதில் நீங்கள் ரொம்பக் கறாராக இருக்கிறீர்களாமே..?

கிஷோர்குமார் தெரியுமா கிஷோர்குமார்.? இந்தியாவைக் கலக்கிய பெரும்பாடகர். பாட்டு ஒலிப்பதிவுக்கு முன்னால் ‘தொண்டை சரியில்லை” என்று சொல்லிக் கொண்டிருப்பாராம். ‘ரெடி டேக்” என்றதும் கண்ணாடி வழியே பார்ப்பாராம். அவரது ஒட்டுநர் வெளியேயிருந்து கட்டை விரலை உயர்த்திக் காட்டுவாராம். கட்டைவிரல் காட்டினால்-பாடவேண்டிய பாட்டுக்குப்பணம் வந்துவிட்டது என்று அர்த்தமாம். உடனே தொண்டை சரியாகிவிடுமாம். ஒவ்வொரு பாட்டுக்கும் அப்படித்தானாம். ஒட்டுநர் கட்டைவிரல் காட்டினால்தான் பாடுவாராம். ஒருநாள் ‘ரெடி டேக்’ என்றதும் கண்ணாடி வழியே பார்த்தார்; கட்டைவிரல் காணவில்லை. கனைத்துக் கனைத்துப் பார்த்தார்; கடைசி வரை கட்டை விரல் காணவேயில்லை. தொண்டை சரியில்லை… இன்றைக்குப் பாட முடியாது என்று வெளியே வந்துவிட்டார். காரில் போகும்போது ஒட்டுநர் கேட்கிறார்: “அய்யா ஏன் பாடாமல் வந்துவிட்டீர்கள்?” கிஷோர் சொல்கிறார்: “நீ கட்டைவிரல் காட்டினால்தானே நான் பாடுவேன்” ஒட்டுநர் அமைதியாகச் சொன்னார்: “அய்யா! இது நம் சொந்தப்படம்…. எப்படி நான் கட்டைவிரல் காட்டுவேன்?” – இவ்வளவு கறாராக உள்ளவர்கள் நிறைந்ததுதான் திரையுலகம். நான் அவ்வளவு கறார் இல்லை. ஓர் அரசாங்க ஊழியன் முதல் தேதி சம்பளத்தை எதிர்பார்ப்பதைப் போலத்தான் நான் என் பாட்டுக்கு ஊதியம் எதிர்பார்க்கிறேன். தப்பா?

கமலா ஜெயபால், செம்பட்டி

* உங்கள் கவிதை வரிகளில் அதிகம் இலை – காய் – பூ – பறவைகள் என்று இயற்கையின் எளிய படைப்பு கூட உயர்ந்து காணப்படுவது ஏன்?

இயற்கையின் படைப்பில் எதுவும் எளியதில்லை. ஒரு பனித்துளியைப் புரிந்து கொள்ள முடியாதவன் சமுத்திரத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஒரு தீப்பொறியை வியக்கத் தெரியாதவன் சூரியனை வியக்க முடியாது. ஒரே ஒரு பூவோடு வசிக்கத் தெரியாதவனுக்கு வனாந்தரமும் போதாது. பிரபஞ்சம் ஒன்றுதான். அது சிறியதும் பெரியதுமாய்ச் சிதறிக் கிடக்கிறது; அவ்வளவுதான்.

மணிமேகலை கண்ணதாசன், மன்னார்குடி

* உங்களுக்குப் பிடித்த பெண்மணிகள்…?

திருமதி கமலா சிவாஜி கணேசன், திருமதி பி. சுசீலா, திருமதி செளந்தரா கைலாசம், திருமதி சிவசங்கரி, திருமதி சந்திரலிலா பாரதிராஜா, டாக்டர் கமலா செல்வராஜ், (இன்னும் ஒரு பெரிய குடும்பத்தில் இரண்டு அன்னையர் இருக்கிறார்கள். இரண்டு பேரையும் சொன்னால் பாசாங்கு ஆகிவிடும்; ஒருவரைச் சொன்னால் பாசம் போய்விடும். தவிர்க்க முடியாமல் தவிர்க்கிறேன்.)

ஒய், காதரிமைதீன், சென்னை,

* திரைப்படப் பாட்டில் நீங்கள் திருப்தியடைய முடிகிறதா?

எப்போதெல்லாம் இசை என்ற கிரீடம் கவிதைக்குச் சூட்டப்படுகிறதோ அப்போதெல்லாம் திருப்தியடைகிறேன். அண்மையில் என் கவிதைக்கு அப்படி ஒரு கிரீடம் சூட்டியவர் ‘அமர்க்களம்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ”காதல் மன்னன்’ சரண். ‘மேகங்கள் எனைத் தொட்டுப் போனதுண்டு – சில மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு. தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு – மனம் . சில்லென்று சில நேரம் சிலிர்த்ததுண்டு! என்று தொடங்கும் ‘தமிழுக்கு நிறம் உண்டு’ தொகுப்பிலிருக்கும் இந்தக் கவிதையை அப்படியே எடுத்து இசையூட்டியிருக்கிறார் தம்பி சரண். பரவசத்தோடு இசையமைத்திருக்கிறார் பரத்வாஜ், இந்தப் பாட்டு தமிழ்நாட்டுக் காற்றை மயக்காமல் விடாது. சரண் வழியை இளம் இயக்குநர்கள் அனைவரும் பின்பற்றினால், தமிழுக்கு ஒரே அமர்க்களம்தான்.

Vairamuthu answers common people’s questions

புயன் எச். அலி அப்பாஸ்,பரங்கிப்பேட்டை.

* 8.1992 அன்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த ஒரு விழாவுக்கு வருகைதந்த தங்களை வரவேற்று என் கல்லூரி மாணவ நண்பர் ஒருவர் மிகச் சிறப்பாக ஒரு கவிதையை உடனடியாக் எழுதி மேடையில் வாசித்தார். தங்களின் உரையில் அந்த மாணவரைக் குறித்தோ கவிதையைக் குறித்தோ ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருந்தது என்னை மட்டுமல்லாது அந்த விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவருக்கும் வருத்தமாக இருந்தது. ஆறரை ஆண்டு காலமாகியும் என் மனதை விட்டு நீங்காத தங்களின் செயலுக்கு என்ன விடையளிக்கப் போகிறீர்கள் கவிஞரே!

வருந்துகிறேன். அது திட்டமிட்டு நேர்ந்ததல்ல; தெரியாமல் நேர்ந்தது. இந்தக் கேள்வியில் எந்தக் கவிஞனின் பெயருக்காகப் பரிந்து பேசுகிறீர்களே அந்தக் கவிஞனின் பெயரையே எழுதாமல் விட்டுவிட்டீர்களே. அதைப் போல.

ராம். ஆனந்த், சேலம்4.

* ‘என் சுவாசக்காற்றே படத்தில் ‘இன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ என்னும் சங்கப்பாடலைச் சேர்த்திருக்கிறீர்கள்… எப்படி வந்தது அந்த யோசனை?

‘தீண்டாய்’ பாடல் ஒலிப்பதிவின் போது திடீரென்று ரகுமான் என்னைப் பார்த்து ‘கடுந்தமிழ் நடையில் ஒரு கவிதை எழுதிக் கொடுங்கள் சார்’ என்றார். ‘என்னபொருள்குறித்து’ என்றேன். ‘விரகதாபத்தில் துடிக்கும் தலைவி குறித்து’ என்றார். நான் யோசித்துவிட்டு, ‘குறுந்தொகையில் வெள்ளி வீதியார் பாட்டு இருக்கிறது சொல்லவா?’ என்றேன். ‘சொல்லுங்கள்’ என்றார். சொன்னேன். மகிழ்ந்துபோய் அதை அப்படியே பயன்படுத்தினார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பனையோலையில் எழுதிய தமிழ் DTS-ல் ஏறிவிட்டது. நல்லவேளை! அந்தக் கவிதையின் கடைசி வரிக்கு ரகுமான் சொல்லுக்குச் சொல் அர்த்தம் கேட்கவில்லை. தப்பித்தோம் வெள்ளி வீதியாரும் நானும்.

* வைகோ-வை அண்மையில் சந்தித்தீர்களா?

அடிக்கடி சந்திப்பதில்லை. சந்திக்கும்போதெல்லாம் இருவரும் கலைஞரின் பெருமை பேசத் தவறுவதில்லை.

நிருபமா, பாண்டிச்சேரி

* ‘இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டோர் நிமிடம் உயிரிருக்கும் அன்பே…. எனை நீ நீங்கினால், ஒரு கணம் என்னுயிர் தாங்காது’ – இது ஜீன்ஸில் நீங்கள் எழுதிய பாடல். இது கற்பனையா, விஞ்ஞானமா?

இரண்டாம் வரி கற்பனை முதல் வரி விஞ்ஞானம். இதயத்துடிப்பு நின்றபின்னும் 4 முதல் 8 நிமிடங்கள் வரை உயிர் இருக்கக்கூடும். இதயத்தைப் பிசைந்து, மீண்டும் இதயத்தைத் துடிக்க வைக்க ஆனால், நான்கு நிமிடங்களுக்குமேல் இதயம் துடிக்காவிட்டால் மூளை இறந்துவிடும். நான்கு நிமிடங்களுக்குப் பிறகு நின்றுபோன இதயத்தைத் துடிக்க வைத்தால், மூளை செத்த உடம்பில் உயிர் மட்டும் வாழும். இதயம்தான் எத்தனை உயர்ந்த உறுப்பு மனிதன் பிறப்பதற்கு 7 மாதங்களுக்கு முன்பே துடிக்கத் தொடங்கி நின்ற பிறகும் மீண்டும் துடிக்கச் சம்மதிக்கும் இதயமே. உனக்கு எம் இதயம் கனிந்த வணக்கம்.

Vairamuthu answers common people’s questions

‘சிந்தனை’ சுரேஷ், திருமங்கலம்

* ஒரே வரியில் ஒரு கவிதை..?

சந்திக்குமிடத்தில் தன் பெயரைச் சொல்லி, ஒரு கவிதை சொல்லுங்கள் என்பது – எழுதப் படிக்கத் தெரியாத தன் காதலிக்கு ஒரு கவிதை எழுதி அஞ்சலட்டையில் அனுப்புங்கள் என்பது – நின்ற இடத்தில் நிற்க வைத்து ஒரு வெண்பா சொல்லுங்கள் என்பது – இவையெல்லாம் ஒரு கவிஞனுக்கு நீங்கள் செய்யும் அவமானங்கள். சின்னச் சின்ன சித்ரவதைகள். நிறுத்திவிடுங்கள்.

க.திருசங்கு, சிவகங்கை

* ‘கம்பன், இளங்கோ, வள்ளுவன் போன்று பூமியில் கண்டதில்லை” என்ற பாரதி, “ஷெல்லிதாசன்’ என்று எப்படி பெயர் வைத்துக் கொண்டான்.?

‘திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ என்றும் அவன்தானே பாடினான்! தம் நாட்டுக் கவிகளைப் பிறர் மதிக்கவே, வெளிநாட்டுக் கவிஞனை அவன் முதலில் மதித்திருக்கிறான்.

வில்லவன்கோதை, ஏனங்குடி

* சிலபேர் உங்களை விமரிசிக்கிறார்கள். நல்ல துக்கம் கவிதைகளையும் கிண்டல் செய்கிறார்கள். அவர்களைக் கண்டிக்க மாட்டீர்களா…?

ஏன் கண்டிக்க வேண்டும்.? அவர்கள் நல்லவர்கள்; *. நடிகர்கள். நாடகத் தன்மை கருதி அப்படி நடிக்கிறார்கள். துச்சாதனன் வேஷம் போட்டவனை வேட்டி உரிவது என்ன நியாயம்…?

பரமேஸ்வரி. நல்லதம்பி, பெரியகுளம்,

* பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, சினிமா. உங்களுக்குப் பிடித்தது எது?

வானொலிதான். அதுதான் தன்னையும் எனக்குள் நுழைத்துக் கொண்டு என்னையும் வேலை செய்ய அனுமதிக்கிறது.

கவிதா, குரோம்பேட்டை

* உங்கள் கவிதைகளின் மொழிபெயர்ப்பு.? சத்தத்தையே காணோமே!

இரண்டுகட்டப் பணிகள் முடிந்தன. மூன்றாம் கட்டப்பணி தொடங்கி இருக்கிறது. முன்னாள் துணைவேந்தர்கள் வேங்கடசுப்பிரமணியம் , ஒளவை நடராசன், இந்நாள் துணைவேந்தர் க.ப. அறவாணன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, வலம்புரிஜான், மாலன், பெரியார்தாசன், கால்யா சண்முகசுந்தரம், சிவசங்கரி, பொன்மணி வைரமுத்து ஆகியோர் கொண்ட பெருங்குழு மொழிபெயர்ப்புக்கான கவிதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க, இந்தியாவின் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்த்து முடித்திருக்கிறார்கள். மேல்நிலைக் குழு அதை மீள்பார்வை செய்யவிருக்கிறது. விரைவில் வெளிவரும். காலம் கவனிக்கிறதோ இல்லையோ, கடமையைச் செய்வோம். ‘கான முயலெய்த அம்பினில் யானையிழைத்த வேலேந்தல் இனிது..’

* சில இலக்கியக் குழுக்கள் உங்களைக் கவிஞராக ஏற்றுக்கொள்ளவில்லையே.?

நான் உயிரோடு இருக்கிறேன் என்பதற்கு இதைவிடச் சாட்சி வேண்டுமா..?

Vairamuthu answers common people’s questions

திருமதி பூமாமுத்தையா, கோவை.கல்லூரி வாழ்க்கையில் உங்களால் மறக்கமுடியாத சம்பவம் ஏதேனும்?

ஒரு சம்பவமுண்டு. சந்தோஷத்தில் ஊறிய துக்கம் அது. என் முதல் கவிதைத் தொகுதி ‘வைகறை மேகங்கள்’ நான் பி.ஏ இரண்டாம் ஆண்டு பியலும்போது வெளிவந்தது. அடுத்த வருடமே அது மகளிர் கிறிஸ்தவ கல்லூரிக்குப் பாடமாக வைக்கப்பட்டது. பிறகுதான் அதை எழுதியவன் பக்கத்திலிருக்கிற பச்சையப்பன் கல்லூரி மாணவன் என்று தெரியவந்தது. அடுத்த ஆண்டே அது நீக்கப்பட்டது. இங்கே கிரீடம் என்பது தலைக்கல்ல, நரைக்குத்தான்.

ராஜகுரு, ஓட்டன்சத்திரம்.

‘செம்பூவே உந்தன் திருமுகம் கண்டாலே கம்ப்யூட்டர் சொல்லாதோ கவி…– எப்படி என் வெண்பா…?

உன் வெண்பா தளைதட்டுகிறது நண்பா!‘சொல்லாதோ’ – தேமாங்காய். காய்முன் நேர்வர வேண்டும் அல்லது மா முன் நிறை வர வேண்டும் வெண்டளைக்கு. எனவே, ‘கம்ப்யூட்டர் சொல்லும் கவி‘ என்று ஈற்றடி இருக்க வேண்டும்.இது காதலிக்காக எழுதிய வெண்பா என்று நினைக்கிறேன். வெண்பாவில் தளைதட்டினால் திருத்திக் கொள்ளலாம். காதலில் தலைதட்டாமல் பார்த்துக்கொள்.

செழியன், தஞ்சை.

பாரதி – பாரதிதாசனை அடையாளங் காட்டினார், நீங்கள் யாரை அடையாளம் காட்டுவீர்கள்?

வானம் அடையாளம் காட்டாவிட்டாலும் சூரியன் உதித்தே தீரும்.அங்கே ஒளிக்கீற்றுகள் பார்க்கிறேன்.நான் காண்பது லாந்தர் வெளிச்சமா சூரிய வெளிச்சம் என்பது போகப்போகத் தெரியும்.

Vairamuthu answers common people’s questions

ஜெ. மாணிக்கவாசகம், இடைப்பாடி

* உங்களை மருதநாயகத்தில் நடிக்க கமல் கூப்பிட்டு, நீங்கள் மறுத்துவிட்டீராமே! என்ன உண்மைக் காரணம்…?

கையிலே வாள்கொண்டு மருத நாயகத்தின் நெஞ்சிலே காலூன்றி, அவனை மனம் மாற்றும் மறத்தலைவன் வேடமாம் எனக்கு. நடிப்புக்காகக்கூட நான் நேசிக்கும் கலைஞனின் நெஞ்சிலே கால்வைக்க நெஞ்சிலே துணிவில்லை. “மார்பில் ஒளிந்துகொண்டால் நான் நேசிக்கும் கலைஞனின் மாரன் அம்பு விழும் நெஞ்சிலே கால்வைக்க நெஞ்சிலே துணிவில்லை. கூந்தலில் ஒளிந்துகொள்ள வரவா..?

எஸ். திருமால்பதி, சமயபுரம்.

* சிவாஜி கணேசன் மேடையில், ‘கண்ணதாசனையும் மிஞ்சி விட்டார்’ என்று தங்களைச் சொன்னவுடன், தாங்கள் ஏன் மறுத்து பதில் கூறவில்லை? கண்ணதாசனைத் தாங்கள் மிஞ்சிவிட்டதாக நினைப்பா?

அந்த விழாவில் நாங்களெல்லாம் பாராட்டிய பிறகு, நடிகர் திலகம் சிவாஜி ஏற்புரை நிகழ்த்தினார். ஏற்புரை ஆற்றும் ஒருவரை ஏற்காமல் எழுந்து இடைமறிப்பது அவை நாகரிகம் ஆகுமா? இன்னொன்று – மறுத்துச் சொல்லுமாறு அவர் யாரையும் வெறுத்துச் சொல்லவில்லையே! பிள்ளை உள்ளம் போன்ற வெள்ளை உள்ளம் நடிகர் திலகத்துக்கு. கவியரசு கண்ணதாசனைக் குறைத்துச் சொல்லும் நோக்கமுமில்லை அவருக்கு.முடிந்துவிட்டதே அந்தப் பிரச்னை. ஏன் முற்றுப்புள்ளியைக் களவாடிக் காற்புள்ளி வைக்கிறீர்கள்?

பன்னீர்செல்வம், வலங்கைமான்.

எந்த வயது ரசிகர்கள் உங்களுக்கு அதிகம்?இப்போதுதான் பல்முளைத்த குழந்தைகளும் இனி எப்போதுமே பல்முளைக்க முடியாத மூதாட்டிகளும்.

Vairamuthu answers common people’s questions

புயல் எச். அலி அப்பாஸ், பரங்கிப்பேட்டை.

* ‘கவியரசு’ என்று அழைக்கப்பட்டபோது தங்களின் மனநிலையும் அப்பட்டத்தைத் தாங்கள் துறந்தபோது உள்ள மனநிலையும் எப்படி இருந்தது,

இருந்தபோது மகிழவும் இல்லை, துறந்தபோது வருந்தவும் இல்லை.

எஸ். ராஜேந்திரன், கபிஸ்தலம். * பாட்டு ரிக்கார்டிங் சமயத்தில் நேர்ந்த சுவையான சம்பவம் ஏதாவது..?

படம்: “லவ் பேர்ட்ஸ்”. பாடல்: ‘மலர்களே… மலர்களே…’ ஏ.ஆர். ரஹ்மான் ஒலிப்பதிவு செய்கிறார். ஹரிஹரன், சித்ரா பாடுகிறார்கள். அதில் ஒரு வரி – ‘மார்பில் ஒளிந்துகொண்டால்மாரன் அம்பு விழும்கூந்தலில் ஒளிந்துகொள்ள வரவா…?’அன்பு நண்பர் பிரமிட் நடராஜன் (தயாரிப்பாளர்) என்னை வெளிறே அழைத்தார். காது கடித்தார்..“கவிஞரே, நீங்க கலைஞருக்கு வேண்டியவரா இருக்கலாம். அதுக்காக முரசொலி மாறன் பேரையெல்லாம் பாட்டில் சேர்க்க வேண்டுமா…?”எனக்குப் புரியவில்லை. மீண்டும் வரிகளைப் பார்த்தேன். ‘மாரன் அம்பு விழும்’ என்றிருந்தது. புரிந்துவிட்டது.“அது முரசொலி மாறன் இல்லீங்க… மன்மதன். வல்லினம் போட்டால், இறன் பாண்டியன். இடையினம் போட்டால், மாரன் – மன்மதன்…” சிரிக்காமல் விளக்கம் அளித்தேன்.“ஒன்றும் தப்பு வராதில்ல…?” என்றார். “வராது. வரவே வராது…” என்றேன்.அச்சத்தின் காரணத்தைக் கடைசியில் அவரே அறிவித்தார் “ஏன்னா, இது ஜெயலலிதா குத்துவிளக்கேற்றித் தொடங்கி வெச்ச படம்…!”

செ.கார்த்திகேயன், சாத்தூர்.

ரஷ்யாவின் கதை முடிந்துவிட்டதா?

இல்லை, முடியவில்லைமுடியாது, முடியாக்கூடாது.இத்தனை சிதைவுகளுக்கு மத்தியில்கூட தனக்குச் சொந்தமாக ஒரு விண்வெளி நிலையம் அமைக்க அது வீறுகொண்டு நிற்கிறது.‘STS’ 88 என்ற 460 டன் கொண்ட விண்வெளி நிலையத்தை 2004-ல் அது நிறுவியே தீரும்.ரஷ்யா ஒரு ஃபீனிக்ஸ்!சாம்பலானாலும் சாவு கிடையாது.

– ஜூனியர் விகடன் டீம்

(21.02.1999 முதல் 03.03.1999 ஆகிய தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்களிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.