எம்.ஜி.ஆர் வீட்டில் கூட்டம்… சசிகலா – திவாகரன் கூட்டணி – ஓ.பி.எஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அந்தக் கட்சியின் சார்பில் மூன்றுமுறை தமிழக முதல்வராகப் பதவிவகித்த ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். பதிலுக்கு, அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்குகிறேன் என ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்திருக்கிறார். இதற்கிடையில், அதிமுகவின் தலைமைக் கழகமான எம்.ஜி.ஆர் மாளிகை வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் பெருவாரியான நிர்வாகிகளின் ஆதரவும் பொதுக்குழுத் தீர்மானமும் எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமாக இருக்கும் இருக்கும் சூழலில் பன்னீரின் அடுத்தகட்ட திட்டம் என்னவாக இருக்கும்?

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்

ஓங்கிய ஒற்றைத்தலைமை கோஷம்!

இரட்டைத் தலைமையின்கீழ் இயங்கிவந்த அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான விவாதம், ஜூன் 14-ம் தேதி நடந்த மா.செயலாளர்கள் கூட்டத்தில் தொடங்கியது. தொடர்ந்து, அதிமுகவின் மூத்த தலைவர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ்&இ.பி.எஸ் இல்லங்களுக்குப் படையெடுத்தனர். பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கவேண்டும் சிலர் நீதிமன்றப் படியேறினர். அது நிராகரிக்கப்பட்டபோதும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட 23 தீர்மானங்களைத்தவிர வேறு எந்தத் தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என பொதுக்குழு நடபெறவிருந்த 21-ம் தேதி விடியற்காலையில் தீர்ப்பு வெளியானது. எடப்பாடி நினைத்தபடி தன்னை ஒற்றைத்தலைமையாக அந்தநாளில் முடிசூட்டிக்கொள்ள முடியவில்லை. ஆனால், அவைத்தலைவர் தேர்வும் அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியும் அப்போது அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்புமே உச்ச நீதிமன்றம் சென்றது. அங்கேயும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கமுடியாது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி கொண்ட அமர்வில் முறையிட்டுக் கொள்ளுங்கள் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த மனு பொதுக்குழு அறிவிக்கப்பட்ட ஜூலை 11-ம் தேதி காலை 9 மணிக்கு விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ஓ.பி.எஸ் கட்சியைவிட்டு நீக்கம்!

ஒருபுறம் வானகரம் ஶ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு நடந்துகொண்டிருக்க, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்துக்கு ஆதரவாளர்கள் புடைசூழ வந்தார் பன்னீர்செல்வம். அங்கே ஏற்கெனவே தயாராக இருந்த எடப்பாடி தரப்புக்கும் பன்னீர் தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதற்கிடையே பொதுக்குழு நடத்தத் தடை இல்லை என்கிற அறிவிப்பு வர எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேவேளை, தொண்டர்களுக்கிடையிலான மோதலை முன்னிட்டு, அதிமுக தலைமைக் கழகத்துக்குச் சீல் வைக்கப்பட்டது. பொதுக்குழுவில், ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகளை இ.பி.எஸ் கட்சியை விட்டு நீக்க, தலைமைக் கழகத்தில் இருந்துகொண்டு, எடப்பாடி பழனிசாமியையும், கே.பி.முனுசாமியையும் கட்சியை விட்டு நீக்கினார் ஓ.பி.எஸ்.

அதிமுக தலைமை கழக அலுவலகம்

பொதுக்குழுத் தீர்மானங்களை மெயில் வாயிலாக, எடப்பாடி தரப்பு தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்த நிலையில், பொதுக்குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வானதை ஏற்கக்கூடாது எனவும் ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதோடு, அதிமுகவின் பொருளாளர் நான்தான், வேறுயாரும் வரவு செலவுகளைக் கையாள அனுமதிக்ககூடாது என்று அதிமுக வரவு செலவு வைத்துள்ள வங்கிகளுக்கும் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார் . இந்தநிலையில், ஓ.பி.எஸ்ஸின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் பேசினோம்,

“அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்றனர். அம்மா அதிமுக என புதிதாகக் கட்சி தொடங்கவேண்டும் என ஒருசிலர் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், பெரும்பாலானோர், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் சென்று அதிமுக தொண்டர்களைச் சந்தியுங்கள், மாநாடு நடத்துங்கள் என்கிற கோரிக்கையைத்தான் முன்வைத்து வருகின்றனர். முதற்கட்டமாக முக்கிய நிர்வாகிகள் கூட்டமொன்றை எம்.ஜி.ஆரின் இல்லத்தில் இப்போதைக்கு முடிவு செய்திருக்கிறோம்.

ஒருபுறம் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு தனக்கான நீதியைப் பெறும் முயற்சிகளைத் தொடர்ந்தகொண்டே மறுபுறம் தொண்டர்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டும் வேலையையும் தொடங்கலாம் என முடிவு செய்திருக்கிறார். கட்சி இரண்டு குழுக்களாக பிரிந்துள்ள நிலையில், இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு வரும் வரைக்கும், தலைமைக் கழக அலுவலகத்தை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார்கள். அதுவே எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றிதான்.

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சந்திப்பு

அதேபோல பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதைத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவேண்டும். கட்சியில் ஒரு தரப்பு அதற்கு எதிராக இருக்கும்போது கண்டிப்பாக தேர்தல் ஆணையம் அதைச் செய்யாது. பாஜக தலைமைக்கும், எடப்பாடியைவிட அண்ணன் ஓ.பி.எஸ் மீதுதான் ஒரு கரிசனம் இருக்கிறது. தவிர, கட்சியில் ஓ.பி.எஸ்ஸுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை சசிகலா தரப்புக்கும் கடும் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. அதனால்தான், பிரிந்திருந்த திவாகரன் மீண்டும் அவருடன் வந்து இணைந்திருக்கிறார். கண்டிப்பாக இவர்கள் மூவரும் இணைந்து டெல்டா, தென் மாவட்டங்களில் உள்ள ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளில் அதிரடியாக இறங்குவார்கள்” என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.