சென்னை: அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரையும், தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணியையும் நியமனம் செய்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழுவில் அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், புதிதாக துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. துணைப் பொதுச் செயலாளர்களை பொதுச் செயலாளர் நியமிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய துணைச் பொதுச் செயலாளர்களை நியமித்து எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதன்படி துணை பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணி, எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பெஞ்ஞமின், ராஜன் செல்லப்பா, பால கங்கா ஆகியோரை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.