பெங்களூரு அருகே முன்னாள் எம்எல்ஏ வீட்டின் பின்புறம் மர்ம நபர்கள் கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே புலிகேசி நகர் பகுதியில், ஆர்டி நகர் மஞ்சுநாதா லேஅவுட் சாலையில் முன்னாள் எம்எல்ஏ பேளூர் கோபாலகிருஷ்ணா என்பவரின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் கோதுமை செடிகளை சிலர் பயிரிட்டு வளர்த்து வந்துள்ளனர். இதனைத் தாண்டி உள்ள நிலப்பரப்பில் சில மர்ம நபர்கள் ஏராளமான கஞ்சா செடிகளையும் சாகுபடி செய்து வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், அவரது வீட்டை சுற்றியுள்ள பகுதியில் யாரும் நடமாட முடியாதவாறும், கண்ணில் தெரியாமல் இருப்பதற்காக கோதுமை செடிகள் பயிரிடப்பட்டிருந்த நிலையில் அவைகளையும் தாண்டி கஞ்சா செடிகள் செழிப்பாக வளர்ந்திருக்கிறது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணா, உடனடியாக இது குறித்து ஆர்டி நகர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த போலீசார் வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளை முற்றிலுமாக அழித்தனர். இந்தச் செடிகளை வளர்த்து சாகுபடி செய்த மர்ம நபர்களை தற்போது தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM