காரைக்கால்: புதுச்சேரியில் ஒரு போதும் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க திமுக முயற்சிக்காது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா கூறியுள்ளார்.
காரைக்காலில் வயிற்றுப் போக்கு, காலராவால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரை, புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செந்தில்குமார், சம்பத் மற்றும் மாநில திமுக நிர்வாகிகள் புதன்கிழமை (ஜூலை 13) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் ஆர்.சிவா செய்தியாளர்களிடம் கூறியது: “காரைக்காலில் வயிற்றுப் போக்கு, காலராவால் மக்கள் பாதிக்கப்பட்டது குறித்த உண்மையான காரணங்களை வெளியிடாமல் மூடி மறைக்கின்றனர். இதுகுறித்து புதுச்சேரிஅரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நலவழித்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி ஆகிய மூன்று துறைகளும் இணைந்து உண்மையான காரணங்களை கண்டறிந்து, இனிமேல் இது போன்ற நிலை காரைக்காலில் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றியுள்ள எந்தப் பகுதிகளிலும் இல்லாத ஒரு பிரச்சினை காரைக்காலில் ஏற்பட்டுள்ளது அவமானத்துக்குரியது. இதனை துடைத்தெறிய வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது” என்றார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸுடன் இணைந்து திமுக ஆட்சியமைக்கும் சாத்தியம் உண்டா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “யாருடனாவது இணைந்து ஆட்சியமைக்க முடியுமா என திமுக அலைந்து கொண்டிருக்கவில்லை. அது போன்ற ஒரு ஆட்சியமைக்க திமுக தலைவர் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார். 5 ஆண்டு கால ஆட்சி முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்.
திமுக தலைவருடை நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி, அது போன்ற நல்லாட்சி புதுச்சேரியில் அமைய வேண்டும் என்ற கருத்துக்களை மக்களிடத்தில் 4 ஆண்டுகள் கடுமையாக எடுத்துச் சொல்வோம். புதுச்சேரியில் திமுக மிகப்பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் தனியாக நிற்க வேண்டுமென்ற உத்வேகத்தோடு பணியாற்றி வருகிறோம். நிச்சயமாக திமுகவால் மட்டும் தான் எதிர்காலத்தில் ஒரு நல்லாட்சியை அளிக்க முடியும்” என்றார்.