மதுரை: காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக, மாணவர் அமைப்புக்களைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடந்தது. வழக்கமான நடைமுறையை தவிர்த்து, புதிதாக கவுரவ சிறப்பு விருந்தினர் என்ற பெயரில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விழாவில் கலந்து கொண்டார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது அலுவலகமே இதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இவ்விழாவை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்விச் செயலர் ஆகியோர் பங்கேற்காமல் புறக்கணித்தனர். விழா மேடையில் அவர்களுக்கு இருக்கையும் ஒதுக்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்தது.
இந்நிலையில், பட்டமளிப்பு விழா பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய நிலையில், மத்திய அமைச்சர் வருகை, ஆளுநரின் செயல்பாட்டை கண்டிக்கும் விதமாக புரட்சிகர மாணவர்கள் முன்னணி நிர்வாகி மாரியப்பன், இந்திய மாணவர்கள் சங்க மாவட்ட செயலர் அன்பரசன் தலைமையிலும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சேக் அப்துல்லா,சையது இப்ராகிம் ஆகியோர் தலைமையில் அந்த இயக்கத்தினர் சுமார் 50-க்கும் மேற்பட்டார் பல்கலைக்கழகம் எதிரே போராட்டம் நடத்தினர். போராடத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். அதேபோல மதுரை விமான நிலையத்தில் ஆளுநரிடம் கோரிக்கை மனு அளிக்கச் சென்ற 5 தற்காலிக ஊழியர்களையும் போலீஸார் தடுத்து அப்புறப்படுத்தினர்.