அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதற்காக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அ.தி.மு.க தலைமை அலுவலகம் பூட்சி சீல் வைக்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல். நத்தம் விஸ்வநாதன் எப்போதும் தெரிவிப்பது, `ஓ.பி.எஸ் ஒன்றும் தெரியாதது போலத் தான் பேசுவார். ஆனால் அவருக்கு வேறு முகம் உள்ளது’ என்று.
வாழப்பொறுக்க மனம் இல்லாதவர் ஓ.பி.எஸ். இதனை நிரூபிக்கும் வகையில்தான் இப்போது செயல்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் தீர்ப்பு வெளிவரவிருந்த நிலையில், கட்சி அலுவலகத்தை நோக்கி பேரணியாக வந்துள்ளார். கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை வைத்திலிங்கம் ஏற்பாட்டில் சிவகங்கை மாவட்ட ஆவின் சேர்மன் அசோகன் செய்துள்ளார். ஒற்றைத் தலைமை விவகாரத்தைச் சாதி ரீதியாகக் கொண்டு போக வேண்டும் என்றெல்லாம் பேசி கடப்பாரைக் கத்தி போன்ற பொருள்களுடன் வந்துள்ளார் ஓ.பி.ஸ்.
நாங்கள் கோயிலாக நினைக்கும் இடத்தை கடப்பாரைக் கொண்டு உடைத்திருக்கிறார்கள். தி.மு.க இதனைத் தூண்டிவிட்டு சில்லறை தனமான வேலையைச் செய்துள்ளது. கடந்த வாரம் வரை ஓ.பி.எஸ்-மீது, கொஞ்சம் சிறிய அளவில் மரியாதை இருந்தது. அது தற்போது நீங்கிவிட்டது.
99.99% பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என விரும்புகிறார்கள். பொதுக்குழுவுக்கு ஓ.பி.எஸ்-ஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு வந்து தனது கருத்தைச் சொல்லி இருக்கலாம். ஓ.பி.எஸ்-ஸால் இந்த முறை தர்மயுத்தம் சீனை போட முடியவில்லை என்பதால் இதுமாதிரியான அராஜக செயல்களில் ஈடுபட்டுள்ளார். தலைமை பதவி தனக்குக் கிடைக்கவில்லை என்றால், கொட்டி கவிழ்க்க வேண்டும், தொண்டர்களைப் பற்றி கவலைப் படாத ஒருவராக ஓ.பி.எஸ் இருந்துள்ளார்” என்று காட்டமாக விமர்சித்தார்.