திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலையில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய ’செக்குக் கல்வெட்டு’ ஒன்று கண்டெடுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி, காணிநிலம் முனிசாமி, ஏலகிரி டான்போஸ்கோ கல்லூரி நூலகர் நீலமேகம், ஏலகிரி மலை அத்தனாவூர் பள்ளி ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலைப்பகுதிகளில் கள ஆய்வு நடத்தினர்.
அப்போது, கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்குக் கல்வெட்டு ஒன்றை இந்த ஆய்வு குழுவினர் கண்டறிந்தனர். இது குறித்து பேராசிரியர் முனைவர். க.மோகன்காந்தி கூறியதாவது,‘‘திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் வரலாற்று தடயங்களான கற்கோடாரிகள், கல்வெட்டுகள், நடுகற்கள் என பல்வேறு வகையான தடயங்களை எங்கள் ஆய்வுக்குழுவினர் தொடர்ச்சியாக கண்டறிந்து வருகிறோம்.
இந்நிலையில், ஏலகிரி மலைக்கு உட்பட்ட அத்தனாவூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கிழக்குப்பகுதியின் சமவெளிப்பகுதியில் சிறு, சிறு கோயில்கள் கட்டி மலைவாழ் மக்கள் வழிப்பாடு நடத்தி வருகின்றனர். காளியம்மன் என்ற பெயரில் 3 பக்கம் சுற்றுச்சுவர் எழுப்பி ‘பாறை உரல்’ஒன்றை வைத்து அதில் நீர் ஊற்றி, மலர் தூவி, கற்பூரம் ஏற்றி அந்த உரலில் காளியம்மன் வீற்றிருப்பதாக கருதி மலைவாழ் மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்த பாறை உரல் வரலாற்றுச்சிறப்பு மிக்கது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். அதாவது, கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய செக்குக்கல் அது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏலகிரி மலைக்கு ‘ஐந்நூற்றவர் வணிகக்குழு’வைச் சேர்ந்த வணிகர்கள் வாணிபம் செய்ய வந்துள்ளது எங்களது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
ஐந்நூற்றவர் வணிகக்குழு என்பவர்கள் தமிழகம் முழுவதும் சென்று வணிகம் செய்த வணிகர்கள் ஆவர். இக்குழுவினர் பல்வேறு திசைகளுக்கு சென்று வணிகம் செய்பவர்கள். நெறிமுடைய ஐந்நூற்றுவன் மகன் முக்கடியன் பிராந்தகன் என்பவன் ஏலகிரி மலையில் உள்ள எள் உள்ளிட்ட எண்ணெய் தரக்கூடிய வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுப்பதற்காக அமைத்துக் கொடுத்த கல்செக்கு தான் தற்போது கண்டறியப்பட்டுள்ள செக்குக் கல்வெட்டு.
ஏலகிரி மலையில் நெல், வரகு, தினை, சாமை, வாழை உள்ளிட்ட வேளாண்மை பொருட்களோடு எண்ணெய் வித்துப் பொருட்களும் பெருமளவில் பரியிடப்பட்டது இதன் மூலம் தெரிய வருகிறது. இன்றைக்கும் எண்ணெய் தரக்கூடிய எள், ஆமணக்கு ஆகியவற்றை ஏலகிரி மலை வாழ் மக்கள் எண்ணெய்காக பயிரிட்டு வருகின்றனர்.
1,000 ஆண்டுகளுக்கு முன்பே எண்ணெய் எடுக்கும் தற்சார்பு தொழில் ஏலகிரி மலையில் தொடர்ந்து நடந்து வருவதை இதன் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது. இந்த அரிய வகை கல்வெட்டில் வாசகமும் எழுதப்பட்டுள்ளது. இது போன்ற வரலாற்று தடயங்களை பாதுகாத்து ஆவணப்படுத்த மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறையினர் முன்வர வேண்டும்” என்றார்.