கோவை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக, மதுரை தொழிலதிபரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேடின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தி 10 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. கோவை மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகரின் நேரடி மேற்பார்வையில், நீலகிரி மாவட்ட போலீஸார் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் சென்னை சிஐடி நகரில் உள்ள, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்திய போது சில ஆவணங்களை கைப்பற்றினர். கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களுக்கும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் வருமான வரித்துறையினர் மூலம் அந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். அதனடிப்படையில் தொழிலதிபர் செந்தில்குமார், அவரது தந்தை தொழிலதிபர் ஆறுமுகசாமி, கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, புதுச்சேரி சொகுசு விடுதி உரிமையாளர் நவீன்பாலாஜி உள்ளிட்ட சிலரிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் லாஜி வோராவிடம் விசாரணை நடத்த முடிவு செய்த போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பினர். அதன்படி, கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் லாஜி வோரா புதன் (ஜூலை 13) ஆஜரானார். லால்ஜி வோரா தனியார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக உள்ளார். இந்நிறுவனத்துக்கு சொந்தமாக மதுரையில் மால் உள்ளது.
அவரிடம் போலீஸார் சிஐடி நகரில் உள்ள தொழிலதிபர் செந்தில்குமார் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த அரசியல் பிரமுகரிடம் இவரது மால் விற்பனை செய்ய திட்டமிடப்பட்ட விவரங்கள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டனர். சில மணி நேரங்களுக்கு பின்னர் லாஜி வோரா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.