புதுடெல்லி: லஞ்சம் வாங்கிய திகார் சிறை அதிகாரிகளின் பட்டியலை 10 நாளில் தாக்கல் செய்ய வேண்டும் என சுகேஷ் சந்திரசேகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு உட்பட ஏராளமான மோசடி வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரும், அவருடைய மனைவியும் எந்தவித தடையும் இன்றி சொகுசு வசதிகளுடன் இருப்பதற்காக சிறைத்துறையை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு மாதந்தோறும் அவர் ரூ.1.5 கோடி வரை லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், சிறையில் இருந்தபடியே தனது சட்ட விரோத மோசடி செயல்களில் சுகேஷ் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.இது தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், திகார் சிறை நிர்வாகத்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே, தன்னையும் தனது மனைவியையும் வேறு சிறைக்கு மாற்ற உத்தரவிடும்படி சுகேஷ் சந்திரசேகர் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்தர்பட் மற்றும் சுதஷ்னு துலியா அமர்வில் நேற்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ரூ.12.5 கோடி அளவிற்கு திகார் சிறை நிர்வாக அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளனர்,’ என தெரிவித்தார். அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், ‘சிறையில் இருந்தபடி செல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும், தனது மோசடிகளை தொடர்ந்து செயல்படுத்தவும் திகார் சிறை நிர்வாகிகளுக்கு மாதம்தோறும் ரூ.1.5 கோடியை சுகேஷ் சந்திர சேகர் அளித்து வந்துள்ளார். எங்களின் விசாரணையில் இது உறுதியாகியுள்ளது,’ என தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘சுகேஷ் சந்திரசேகர் அடுத்த 10 தினங்களுக்குள் திகார் சிறையில் எந்தெந்த அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் வழங்கினார் என்பது தொடர்பாக பெயர் பட்டியலையும், இதர விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,’ என தெரிவித்து, விசாரணையை ஒத்திவைத்தனர்.