இந்திய நிகழ்வுகள்
ரயில்வே சுரங்கப்பாதை இடிந்த விபத்தில் நான்கு பேர் பலி
தன்பாத்-ஜார்க்கண்டில் கட்டப்பட்டு வந்த ரயில்வே சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில், நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில், ரயில்வே சுரங்கப் பாதைக்கான கட்டுமானப் பணி நடந்து வந்தது. இந்தப் பணியில், ஆறு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பணி நடந்த இடத்திற்கு அருகேயிருந்த ரயில் தடத்தில் சரக்கு ரயில் சென்ற போது திடீரென சுரங்கப் பாதை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ”இவர்கள் அனைவரும் குல்ஹி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்,” என காவல் துணை கண்காணிப்பாளர் அபிஷேக் குமார் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அப்பகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 5:30 மணிஅளவில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
ரூ.4,389 கோடி சுங்க வரி ஏய்ப்புசீன நிறுவனம் ‘தில்லாலங்கடி’
புதுடில்லி-சீனாவைச் சேர்ந்த, ‘ஓபோ’ என்ற மொபைல்போன் தயாரிப்பு நிறுவனம், 4,389 கோடி ரூபாய் சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளது, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் நடத்திய சோதனையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த ஓபோ நிறுவனம், ஓபோ இந்தியா என்ற பெயரில் நம் நாட்டில் இயங்கி வருகிறது. ‘ஓபோ, ஒன்பிளஸ், ரியல்மீ’ என்ற பெயர்களில் மொபைல்போன் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.இந்த நிறுவனம், சட்டவிதிகளை மீறி பல கோடி ரூபாயை சீனாவுக்கு அனுப்பியுள்ளது தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இந்நிறுவனம் சுங்க வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:ஓபோ இந்தியா நிறுவனம், சீனாவில் இருந்து பல இயந்திரங்கள், சாதனங்கள், மொபைல் போன் பாகங்களை இறக்குமதி செய்துள்ளது. இதற்கு உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாமல், 2,981 கோடி ரூபாய் வரை சுங்க வரிச்சலுகையைப் பெற்றுள்ளது.மேலும், சீனாவில் உள்ள நிறுவனங்களுக்கு உரிமைத் தொகை, லைசென்ஸ் கட்டணம் செலுத்தியதாக பொய் கணக்கு காட்டி, 1,408 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. நிறுவன உயரதிகாரிகளின் அலுவலகம், வீடு ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனைகளில் இது தெரியவந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘விவோ’ நிறுவனத்துக்கு உத்தரவு மற்றொரு சீன மொபைல் போன் நிறுவனமான ‘விவோ’ நம் நாட்டில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்கிறது. தன் மொத்த வருவாயில், 50 சதவீதத்தை, அதாவது, 62 ஆயிரத்து 476 கோடி ரூபாயை கணக்கில் காட்டாமல் சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக, இந்த நிறுவனம் மீது அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.இதைத் தொடர்ந்து, நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்து அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எதிர்த்து விவோ நிறுவனம் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.’வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம், 251 கோடி ரூபாய் இருப்பு வைக்க வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அதை பயன்படுத்தக் கூடாது. ‘மேலும், 950 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் வழங்கினால், வங்கிக் கணக்கு பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும்’ என, உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளது.
மற்றொரு சீன மொபைல் போன் நிறுவனமான ‘விவோ’ நம் நாட்டில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்கிறது. தன் மொத்த வருவாயில், 50 சதவீதத்தை, அதாவது, 62 ஆயிரத்து 476 கோடி ரூபாயை கணக்கில் காட்டாமல் சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக, இந்த நிறுவனம் மீது அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.இதைத் தொடர்ந்து, நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்து அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எதிர்த்து விவோ நிறுவனம் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.’வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம், 251 கோடி ரூபாய் இருப்பு வைக்க வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அதை பயன்படுத்தக் கூடாது. ‘மேலும், 950 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் வழங்கினால், வங்கிக் கணக்கு பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும்’ என, உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளது.
நடிகை மீது குற்றப்பத்திரிகை தாக்கல்குற்றம் நிரூபணமானால் 10 ஆண்டு சிறை
புதுடில்லி-மறைந்த ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, நடிகை ரியா சக்ரவர்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை சித்தரிக்கும் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சுஷாந்த் சிங். இவர், 2020ல் தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக, அவரது காதலி ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் சவுமிக் சக்ரவர்த்தி உள்ளிட்ட, 35 பேர் மீது போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரியா சக்ரவர்த்தி, போதை மருந்தை சுஷாந்த் சிங்கிற்கு சப்ளை செய்து வந்துள்ளார்.போதை மருந்துக்கான தொகையை ரியா தந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபணமானால் அவருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த குற்றச்சாட்டை ரியா சக்ரவர்த்தி மறுத்து உள்ளார்.அதேசமயம், சுஷாந்த் சிங் போதை மருந்து பயன்படுத்துவார் என அவர் ஒப்புக் கொண்டு உள்ளார். ரியா, சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், ஒரு மாத சிறைத்தண்டனைக்குப் பின் ஜாமினில்வந்துள்ளார்.
45 துப்பாக்கிகளுடன் தம்பதி கைது
புதுடில்லி–புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், 45 கைத்துப்பாக்கிகளுடன் வந்த இந்திய தம்பதியை நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆசிய நாடான வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து, 10ம் தேதி புதுடில்லி விமான நிலையம் வந்த ஒரு தம்பதியின் உடைமைகளை, சுங்கத்துறையினர் சந்தேகத்தின் படி பரிசோதித்தனர். அப்போது அவர்கள் கொண்டுவந்த சூட்கேசில், 45 கைத்துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அவர்கள் ஜக்ஜித் சிங் மற்றும் ஜஸ்விந்தர் கவுர் என்றும், இருவரும் கணவன் – மனைவி என்றும் அடையாளம் காணப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை, ‘துப்பாக்கிகள் முழுமையாக செயல்படக்கூடியவை’ என தன் முதற்கட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
‘பிரான்சின் பாரிஸ் நகரில் இருந்து வியட்நாமில் தரையிறங்கியதும், ஜக்ஜித் சிங்கிடம் அவரது சகோதரர் மஞ்சித் சிங் என்பவர், இந்த சூட்கேசை கொடுத்துள்ளார்’ என சுங்க அதிகாரிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளின் மதிப்பு, 23 லட்சம் ரூபாயாகும். தேசிய பாதுகாப்பு படையினரின் விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்ட தம்பதியர், ஏற்கனவே துருக்கியிலிருந்து 25 கைத்துப்பாக்கிகளை இந்தியாவுக்கு கொண்டுவந்ததை ஒப்புக்கொண்டு உள்ளனர்.
தமிழக நிகழ்வுகள்
கேரளாவுக்கு கடத்த முயன்ற அரிசி பறிமுதல்
கூடலுார்–கேரளாவுக்கு கடத்த முயன்ற 550 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு தினந்தோறும் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக ரேஷன் அரிசி அதிகம் கடத்தப்பட்டு வந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில் நேற்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவு பேரில், இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். கேரளாவுக்கு கடத்துவதற்காக கூடலூர் பஸ் ஸ்டாண்டில் பதுக்கி வைத்திருந்த 11 சாக்கு பையில் இருந்து 550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கூடலூரைச் சேர்ந்த விஜி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தொடர்ந்து லோயர்கேம்ப், குமுளி மலைப்பாதை, எல்லைப் பகுதியான குமுளி ஆகிய இடங்களில் ரோந்து சென்று தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாலியல் 5 ஆண்டு சிறை
திண்டுக்கல்,- நத்தம் முல்லை நகரை சேர்ந்தவர் ஷாஜகான் 45. அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு 2015 ல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இவ் வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. ஷாஜகானுக்கு ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 அபராதம் விதித்து நீதிபதி ஜி. விஜயகுமார் உத்தரவிட்டார்.
1.5 டன் அரிசி கடத்தல்; மூவர் கைது
விருதுநகர்–விருதுநகரில் 1.5 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் சிறுவன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.நேற்று முன்தினம் இரவு கலெக்டர் அலுவலகம் பகுதியில் சூலக்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மினிலாரியை சோதனையிட்டனர். இதில் 30 கிலோ எடை உள்ள ரேஷன் அரிசி சிப்பம் 50 பைகளில் இருந்தது தெரிந்தது.இதன் எடை 1500 கிலோ. விசாரித்ததில் மதுரை சாப்டூர் பள்ளிவாசல் தெரு மோகன் 20, பங்கஜம் காலனி கண்ணன் 19, 17 வயது சிறுவன் ஆகியோர் என தெரிந்தது.சூலக்கரை போலீசார் குடிமை பொருள் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் அவர்கள் மூவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரானா இயக்குனர்கள் சிறையில் அடைப்பு
சென்னை:வங்கியில் இருந்து 4,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் கைதான சுரானா குழுமத்தின் இயக்குனர்கள் உள்ளிட்ட நான்கு பேரை, ஜூலை 27 வரை நீதிமன்ற காவலில் அடைக்க, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட். சுரானா பவர் லிமிடெட், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை, ஐ.டி.பி.ஐ., வங்கியிடம் இருந்து, 4,000 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல், முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த நிறுவனங்களுக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.இந்நிலையில், இந்த கடன் தொகையை சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா. விஜயராஜ் சுரானா, நிறுவன ஊழியர்கள் ஆனந்த், பிரபாகரன் ஆகியோர் மீது, அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் நால்வரையும் கைது செய்த அமலாக்கத்துறையினர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன், நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நால்வரையும் ஜூலை 27 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
ரயில்களில் கொள்ளை அடித்து சுற்றுலா சென்ற இருவர் கைது
சென்னை:ரயில் பயணியரிடம் பணம், நகை கொள்ளையடித்து, ஜாலியாக சுற்றுலாவுக்கு சென்ற இரண்டு பேரை, ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு தும்கூர் பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார், 57. இவர் தன் குடும்பத்தினரோடு 7ம் தேதி விரைவு ரயிலில் பயணம் செய்யும்போது, அரக்கோணத்தை தாண்டியதும், திடீரென ஒரு நபர், திலீப்குமார் மனைவிடமிருந்து கைப்பையை திருடி சென்று விட்டார். அதில், 30 கிராம் சங்கிலி, மூன்று மோதிரம், 10 ஆயிரம் பணம், ஒரு மொபைல் போன் இருந்ததாக, ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
இதேபோல், 8ம் தேதி திண்டுக்கல் ரயில் நிலையத்தில், பெண் பயணி ஒருவரிடமும், ஒரு மொபைல் போன், 10 ஆயிரம் ரூபாய் பணத்தை, ஒருவர் கொள்ளையடித்து சென்றதாக புகார் தரப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் மற்றொரு பெண் பயணியிடமும், நான்கு சவரன் தாலி செயினை பறித்து சென்று விட்டனர்.
மூன்று புகார்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். பயணியர் அளித்த அடையாளங்களை வைத்து, இரண்டு பேரை அரக்கோணத்தில் மடக்கி பிடித்து நேற்று கைது செய்தனர்.கோவாவில் இருவரும் சந்தித்து நண்பர்களாகி, சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர்.
அதற்காக ரயிலில் பயணம் செய்யும்போது, பயணியரிடம் கொள்ளையடித்தது தெரியவந்தது. ஒருவர் பெயர் சதேந்திர குமார், 40; ஹரியானாவை சேர்ந்தவர். ராணுவத்தில் பணியாற்றியவர். தன் காதலியை சுட்டுக் கொன்ற கொலை வழக்கில் சிறைக்கு சென்றுள்ளார். மற்றொருவர் லோகேந்தர் குமார், 22; ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.
அரசு மருந்தக ஊழியர் குத்திக்கொலை :கள்ளக்காதலி வெறிச்செயல்
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அருகுவிளையைச் சேர்ந்தவர் ரதீஷ்குமார் 35. ஆரல்வாய்மொழியில் அரசு இ.எஸ்.ஐ. மருந்தக ஊழியர்.
மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர் ஷீபா 37 திருமணமாகி கணவர் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.சில ஆண்டுகளுக்கு முன்பு கருங்கல் இ.எஸ்.ஐ. மருந்தகத்தில் ரதீஷ்குமார் பணியாற்றியபோது சிகிச்சைக்கு வந்த ஷீபாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் ரதீஷ்குமாருடன் சேர்ந்து வாழ்ந்தார். தமது கணவரிடம் இருந்து விவாகரத்தும் பெற்றார்.இதனிடையே சமீபத்தில் ரதீஷ்குமார் சென்னை ஐ.டி. துறையில் பணியாற்றும் பெண்ணை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்னர் ஷீபா உடனான தொடர்பை துண்டித்தார். இதில் ஷீபா ஆத்திரமுற்றார்.
திட்டமிட்டுக் கொலை
நேற்று ரதீஷ்குமாரிடம் போனில் பேசினார். ‘கடைசியாக ஒரு முறை நேரில் பார்த்துக் கொள்கிறேன். இனி தொந்தரவு செய்யமாட்டேன்’ என்றார். ரதீஷும் மருந்தகத்திற்கு வரச் சொன்னார். ஆரல்வாய்மொழி மருந்தகத்திற்கு சென்ற ஷீபா தான் சமைத்து கொண்டு வந்த உணவை ரதீஷூக்கு பரிமாறினார்.சாப்பாட்டில் விஷம் கலந்து இருந்ததால் ரதீஷ் தள்ளாடினார்.
திடீரென ஷீபா கையோடு கொண்டு வந்திருந்த கத்தியால் ரதீஷை சரமாரியாக குத்தினார். 40 க்கும் மேற்பட்ட குத்துகளால் ரத்த வெள்ளத்தில் சதீஷ் இறந்தார். ஆரல்வாய்மொழி போலீசார் ஷீபாவை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்