நாடு விட்டு நாடு பறக்கிறார் கோத்தபய ராஜபக்சே| Dinamalar

கொழும்பு-இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 73, குடும்பத்துடன் மாலத்தீவுக்கு நேற்று தப்பிச் சென்றார். அங்கிருந்தபடி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை காபந்து அதிபராக நியமித்தார்.

இதனால் அந்நாட்டு அரசியல் நெருக்கடி தீவிரமடைந்து, மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாலத்தீவிலும் ராஜபக்சேவுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு கிளம்பி இருப்பதால், அவர் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அண்டை நாடான இலங்கையின் அதிபர் மாளிகையை லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு உள்ளே புகுந்தனர்.

விபரீதத்தை முன்னரே உணர்ந்த அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னெச்சரிக்கையாக குடும்பத்துடன் தலைமறைவானார்.இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அவர் குடும்பத்துடன் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. அதிபர் பதவியை நேற்று ராஜினாமா செய்ய உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேயவர்தனே வாயிலாக தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, வரும் 20ல் பார்லிமென்டை கூட்டி, புதிய அதிபரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.கடும் அதிருப்திஇதற்கிடையே திடீர் திருப்பமாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே தன் மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் ராணுவ விமானத்தில் புறப்பட்டு, தெற்காசிய நாடான மாலத்தீவுக்கு சென்றதாக, இலங்கை விமானப்படை நேற்று அறிக்கை வெளியிட்டது.ராணுவ அமைச்சகத்தின் முழு ஒப்புதலுடன் இந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலத்தீவு சென்றடைந்த கோத்தபய, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை காபந்து அதிபராக நியமித்தார்.அந்நாட்டு அரசியலமைப்பின் படி, அதிபருக்கு உடல் நலக்குறைவோ அல்லது வெளிநாடு சென்றாலோ, காபந்து அதிபராக பிரதமரை நியமிக்க முடியும். அதன்படி, இந்த நியமனத்தை கோத்தபய அறிவித்துள்ளார்.

இந்த தகவலை சபாநாயகர் மகிந்த யாபா அபெய வர்தனே உறுதி செய்தார்.அதே நேரம், கோத்தபய உறுதி அளித்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக தொலைபேசி வாயிலாக நேற்று தெரிவித்ததாகவும், திட்டமிட்டபடி 20ல் புதிய அதிபருக்கான தேர்தல் நடக்கும் என்றும் சபாநாயகர் அபெய வர்தனே தெரிவித்தார். கோத்தபய ராஜினாமா செய்யாததும், காபந்து அதிபராக ரணில் நியமிக்கப்பட்டதும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், நாடு முழுதும் கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது; ஆங்காங்கே மீண்டும் போராட்டங்கள் வெடிக்கத் துவங்கின. கொழும்பு நகரில் உள்ள பிரதமர் அலுவலகம் முன், போராட்டக்காரர்கள் நேற்று குவிந்தனர். இதையடுத்து காபந்து அதிபர் ரணில், நாடு முழுதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார். போராட்டம் தீவிரமடைந்து வரும் மேற்கு மாகாணத்தில் கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ரணில் விக்ரமசிங்கே, ‘டிவி’ வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை:அதிபர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணி நடக்கிற நிலையில், பிரதமர் அலுவலகத்தை ஆக்கிரமிக்க, சில போராட்டக் குழுக்கள் முயற்சிப்பதாக உளவுத்துறை வாயிலாக தகவல் கிடைத்தது. அதிபர் வெளியேற விமானம் அளித்து உதவிய விமானப்படையின் கமாண்டர் இல்லம், கடற்படை மற்றும் ராணுவ கமாண்டர்களின் இல்லங்களை முற்றுகையிட்டு, நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, சில போராட்டக் குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே, நாடு முழுதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. கலவரங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி, இதை நிறைவேற்ற பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய அரசு அமைந்தவுடன், பிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கண்ணீர் புகை குண்டுகள்

இந்த உத்தரவுக்குப் பின், பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசி போலீசார் கலைத்தனர். இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ, ‘டிவி’ சேனலான ரூபவாஹினி அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நேற்று நுழைந்ததை அடுத்து, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, மாலத்தீவு முன்னாள் அதிபரும், தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத் உடன் பேச்சு நடத்திய பின், அவர் அனுமதியின்படி கோத்தபய அந்நாட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.’கோத்தபய பதவியை ராஜினாமா செய்யாமல் தங்கள் நாட்டுக்கு வந்துள்ளதால், அவரது பயணத்தை நாங்கள் நிராகரிக்க முடியாது’ என, அந்நாட்டு அரசு கூறியதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது.கோத்தபய வருகைக்கு, மாலத்தீவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், மாலத்தீவு தேசிய கட்சியின் தலைவருமான துன்யா மவுமூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

latest tamil news

”இலங்கை மக்களின் உணர்வுகளை மாலத்தீவு அரசு மதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப்படும்,” என்றார்.கோத்தபயவுடன், 13 பேர் விமானத்தில் வந்து இறங்கியதாக மாலத்தீவு செய்தி தொலைக்காட்சிகள் தகவல் தெரிவித்தன. அவரது இளைய சகோதரரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சேவும் அவருடன் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

கோத்தபய, மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளார் என்றும், பிரச்னை இல்லாத நாட்டை சென்றடைந்ததும் தான், அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது.இதற்கிடையே, கோத்தபய மாலத்தீவு தப்பிச் செல்ல இந்திய அரசு உதவியதாக வெளியான தகவலை, இலங்கைக்கான இந்திய துாதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘அதே நேரத்தில் இலங்கை மக்களுக்கு எப்போதும் நாங்கள் ஆதரவாக துணை நிற்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை’ என அறிக்கை வெளியிடப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.