சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 28-ம் தேதி சென்னை வருகிறார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், வரும் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடக்கவுள்ளது. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்க தமிழக அரசின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வீரர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
போட்டியை நடத்த தமிழக அரசின் அனைத்து துறைகளின் செயலர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் அடங்கிய பணிக்குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்தவும் உத்தரவிட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 19-ம் தேதி டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்து, ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். ஒலிம்பியாட் ஜோதி, நாற்பது நாட்களில் 26 மாநிலங்களில் உள்ள 75 நகரங்களில் பயணித்து இறுதியாக மாமல்லபுரம் வந்தடைகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் மாமல்லபுரம் சென்று போட்டிக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். பூஞ்சேரி கிராமத்தில் ஃபோர் பாயின்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் 52 ஆயிரம் சதுரஅடியில் பிரம்மாண்ட அரங்கம், 22 ஆயிரம் சதுரஅடியிலான அரங்கம் உள்ளிட்டவற்றில் நடந்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பணிகளை வரும் 20-ம் தேதிக்குள் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 28-ம் தேதி தொடக்கவிழா மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி பிரதமர் மோடியின் புதுச்சேரி பயணம் உறுதியாகியுள்ளது. எனவே, பிரதமர் மோடி 28-ம் தேதி சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்று, போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளதாகவும், தொடர்ந்து அவர் மாமல்லபுரம் சென்று போட்டிகளை பார்வையிட வாய்ப்பிருப்பதாகவும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.