புதுடெல்லி: பாலின சமத்துவம் காட்டுவதில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது. உலக பொருளாதார மன்றமானது 2022ம்ஆண்டு பாலின சமத்துவ இடைவெளி குறித்த அறிக்கையை ஜெனீவாவில் வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலகிலேயே ஆண், பெண் சமத்துவம் வழங்குவதில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் இந்தியாவிற்கு 135வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு பின் சுமார் 11 நாடுகள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிற்கும் கீழான தரவரிசையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காங்கோ, ஈரான் மற்றும் சாத் நாடுகள் உள்ளன. இந்தியா பாலின சமத்துவத்தை கொரோனா தொற்று ஒரு தலைமுறைக்கு பின்னுக்கு தள்ளிவிட்டதாகவும், பலவீனமான மீட்சியானது உலகளவில் இந்தியாவை மோசமாக்குவதாகவும் உலக பொருளாதாரர மன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக மாநில தலைவர்களாக பெண்கள் பணியாற்றிய ஆண்டுகளின் பங்கு குறைந்து வருவதும் ஒரு காரணமாகும்.