புதுடெல்லி: சீனாவைச் சேர்ந்த ஒப்போ நிறுவனம் ரூ.4,390 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்தது வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய 48 இடங்களில் வருவாய் புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை மேற் கொண்டனர். இதில், விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாக வெளிநாட்டில் உள்ள வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. குறிப்பாக, நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்யவே இதுபோன்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், மற்றொரு சீனசெல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ இந்தியா, ரூ.4,390 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்திருப்பதை வருவாய் புலனாய்வுஇயக்குநரகம் கண்டு பிடித்துள்ளதாக. செல்போன் தயாரிப்புக்கு தேவையான உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட வரி விலக்கை ஓப்போ நிறுவனம் தவறாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
மேலும் ஒப்போ நிறுவனம் ராயல்டி என்ற பெயரில் பெருமளவு தொகையை சீனாவுக்கு அனுப்பி உள்ளது. இதை இந்திய சட்டப்படி இறக்குமதி பொருட்களுக்கான பரிவர்த்தனை மதிப்புடன் சேர்க்க வில்லை. இந்நிலையில், சுங்க வரி செலுத்துமாறு ஒப்போ இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு செலுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும். மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இவ் வாறு கூறப்பட்டுள்ளது.
ஜியோமி மீது புகார்: இதுபோல மற்றொரு சீன செல்போன் உற்பத்தி நிறுவனமான ஜியோமி மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வருவாய் புலனாய்வு இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு நாட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, சீனாவின் 300-க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் சீனா வின் முதலீட்டுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால்சீன நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்ய போராடி வருகின்றன.