புதுடெல்லி: பதவியில் இருந்தபோது உளவுபார்க்கவில்லை என முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியுள்ளார்.
ஈரான் தூதராக ஹமீத் அன்சாரி பணியாற்றிய காலத்தில் உளவு வேலை பார்த்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்சா குற்றம் சாட்டினார். மேலும், ஹமீத் அன்சாரி குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது, அவரது அழைப்பில் பேரில், டெல்லியில் நடந்த தீவிரவாதம் குறித்த மாநாட்டில் பங்கேற்க தான் இந்தியா வந்ததாகவும், அப்போது ரகசிய தகவல்களை ஹமீத் அன்சாரி பகிர்ந்து கொண்டார் எனவும் நுஸ்ரத் மிர்சா கூறியிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும் எனபா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார். இதுகுறித்து ஹமீத்அன்சாரி வெளியிட்ட அறிக்கை.
என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சில ஊடகங்களும் பா.ஜ.க.வும் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் பத்திரிகையாளரை நான் சந்திக்கவில்லை. எனது சந்திப்புகள், மாநாடுகள் ஆகியவவை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும், மத்திய அரசுக்கும் நன்கு தெரியும். என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உள்ள பொய்குறித்து அதனால் அறிய முடியும்.
டெல்லியில் நடந்த தீவிரவாதம் குறித்த மாநாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை அடிப்படையில் வெளிநாட்டைச் சேர்ந்த முக்கியபிரமுகர்களுக்கு, குடியரசுத் துணைத் தலைவர் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் அழைப்பிதழ் அனுப்புவது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அழைப்பாளர்களை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தேர்வு செய்வது வழக்கமான நடைமுறை. நான் பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை அழைக்கவும் இல்லை, சந்திக்கவும் இல்லை.
ஈரான் தூதராக பணியாற்றியபின், நான் ஐ.நா.வின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டேன். எனது அனைத்து பணிகளும் மத்திய அரசுக்கு தெரிந்துதான் நடந்தது என்றார்.