பிரதமர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடல்

நாட்டில் தற்பொழுது நிலவும் நெருக்கடி நிலையை தணிக்க ஒரு தீர்வாக பிரதமர் கூடிய விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என பாராளுமன்ற அலுவலகங்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற கட்சி தலைவர்களின் பங்குபற்றலில் நேற்று (13) பிற்பகல் பாராளுமன்றக் கட்டத் தொகுதியில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்து கௌரவ சபாநாயகர் விளக்கம் அளித்தார். நாட்டில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் கட்சித் தலைவர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தற்போதைய பாதுகாப்பு நிலமைகள் குறித்து இங்கு விளக்கம் அளித்தனர்.

நாட்டு மக்களுக்கு அறிவித்தது போன்று இன்று (13) நள்ளிரவு 12மணிக்கு முன்னர் ஜனாதிபதி அவர்களின் பதவி விலகல் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என அதிமேதகு ஜனாதிபதி தொலைபேசி ஊடாக தனக்கு அறிவித்திருப்பதாக சபாநாயகர் இங்கு தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மைத்திரிபால சிறிசேன, கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல, கௌரவ அனுரகுமார திஸாநாயக்க, கௌரவ மனோ கணேசன், கௌரவ வாசுதேவ நாணயக்கார , கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கௌரவ கயந்த கருணாதிலக, கௌரவ ரஞ்சித் மத்தும பண்டார, கௌரவ அங்கஜன் ராமநாதன் , கௌரவ கெவிந்து குமாரசிங்க, கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ வி.ராதாகிருஷ்ணன், கௌரவ உதய கம்மன்பில, சங்கைக்குரிய அத்துரலிய ரத்ன தேரர், கௌரவ எம் .ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எச்.ஈ. ஜனகாந்த சில்வா,
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.