ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரிகாரப் பூஜை செய்வதாகச் சொல்லி 70 பவுன் நகைக்கும் மேல் தம்பதியினர் நகைமோசடி செய்துள்ளனர். இதில் கணவரை போலீஸார் கைது செய்தனர். மனைவி தலைமறைவாக உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், “ஶ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி தங்கமாயாள். பாலமுருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப் பகுதியில் உள்ள பென்னிங்டன் மார்க்கெட்டில் காய்கறிக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் பாலமுருகனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. பல இடங்களில் சிகிச்சைப்பெற்றும் சரிவராததால் தங்கமாயாள் தனது வீட்டு அருகே உள்ள முப்பிலிமாடன் சாமி கோயிலில் அருள்வாக்கு சொல்லக்கூடிய பூசாரியான பழனிகுமாரிடம் மந்திரித்து திருநீர் வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, காய்கறிக்கடையில் நன்றாக வியாபாரம் நடக்கவேண்டும் என்பதற்காகவும் பழனிக்குமாரை அணுகி மீண்டும் திருநீர் கேட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பழனிக்குமார், “பரிகார பூஜை செய்தால் எல்லாம் சரிமாகிவிடும், ஆனால் பூஜையில் வைக்க வீட்டில் உள்ள நகைகள் வேண்டும்” என தங்கமாயாளிடம் கேட்டுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்து அவரும், தன்னிடம் இருந்த 26 பவுன் நகையை பரிகார பூஜைக்காக கொடுத்துள்ளார். நகையை வாங்கிக்கொண்ட பழனிக்குமாரும், அவரின் மனைவி ரம்யாவும் நகையை வைத்து மண்டலப்பூஜை செய்யவேண்டுமெனச் சொல்லி தங்கமாயாளை ஏமாற்றியுள்ளனர். பல வாரங்களாகியும் பழனிக்குமாரும், அவரின் மனைவி ரம்யாவும் நகையை திருப்பித்தராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்கமாயாள் இதுகுறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் ஶ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் உத்தரவுபடி நகர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில், தங்கமாயாளை ஏமாற்றியதுபோலவே ஆலம்பட்டியைச் சேர்ந்த முருகேசன், ராஜலக்ஷ்மி, மங்காபுரத்தை சேர்ந்த ராமேஸ்வரன், பெருமாள்பட்டியை சேர்ந்த கௌதமன் உட்பட பலரிடமும் சுமார் 70 பவுன் நகைக்கு மேல் பழனிக்குமார்-ரம்யா தம்பதியினர் ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, பழனிகுமாரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள அவருடைய மனைவி ரம்யாவை போலீஸார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பழனிக்குமாரிடம், மோசடியில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? நகைகள் எங்கே? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.