வரும் திங்கட்கிழமை முதல் அரிசி முதல் பால் வரை பல உணவு பொருட்களின் விலை உயர போகிறது.
இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் ஒரு சில உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது தான்.
ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கும் இந்த ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு பின்னர் என்னென்ன உணவுப் பொருட்களின் விலை உயரும் என்பதை தற்போது பார்ப்போம்.
ஜிஎஸ்டி வரி
வரும் திங்கட்கிழமை முதல், சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட உள்ளதால், சில பொருட்களை வாங்குவதற்கு உங்கள் பாக்கெட்டில் இருந்து அதிக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி
கடந்த மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து, பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை திருத்தியமைக்க அரசு முடிவு செய்தது. இதன் காரணமாக புதிய ஜிஎஸ்டி வரி விதிப்புகள் ஜூலை 18ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. சில குறிப்பிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஜூலை 18ஆம் தேதி முதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சில பொருட்களின் விலை குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்னென்ன பொருட்கள் விலை உயரும்?
ஜிஎஸ்டி வரி விகித திருத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு முன்கூட்டியே பேக்கேஜ் செய்யப்பட்டதயிர், லஸ்ஸி மற்றும் மோர் பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜூலை 18 முதல் 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இந்த பொருட்களுக்கு இதற்கு முன்பு ஜிஎஸ்டி வரம்பில் இருந்து விலக்கில் இருந்ததால் இந்த பொருட்களின் விலை உயரும்
காசோலைகள்
காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது. மருத்துவமனை அறை வாடகை (ICU தவிர்த்து) ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ. 5000க்கு மேல் ஐடிசி இல்லாத அறைக்கு 5 சதவீதம் வசூலிக்கப்படும்.
அட்லஸ் வரைபடங்கள்
அட்லஸ்கள் உள்ளிட்ட வரைபடங்கள் மற்றும் வரைபடங்களுக்கு ஜூலை 18 முதல் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். மேலும் ஹோட்டல் அறைகளின் வாடகை ஒரு நாளைக்கு ரூ.1000க்குள் குறைவாக இருந்தால் தற்போது வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எல்இடி விளக்குகள்
எல்இடி விளக்குகள், சாதனங்கள் ஆகியவற்றுக்கு 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி உயர்ந்துள்ளதால் இந்த பொருட்களின் விலையும் உயரும்.
கத்தி பென்சில் பிளேடு
வெட்டும் கத்திகள், காகிதக் கத்திகள், பென்சில் ஷார்பனர்கள் மற்றும் பிளேடுகள் கொண்ட கத்திகள், கரண்டிகள், ஃபோர்க்ஸ், லேடில்ஸ், ஸ்கிம்மர்கள், கேக்-சர்வர்கள் போன்றவை 12 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து 18 சதவீத ஜிஎஸ்டி என உயர்கிறது.
என்னென்ன பொருட்களின் விலை குறையும்?
பாதுகாப்புப் படைகளுக்கு பயன்படும் பொருட்கள், தனியார் நிறுவனங்கள்/விற்பனையாளர்களால் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பாதுகாப்புப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சரக்கு வண்டிகளின் வாடகை
சரக்கு வண்டிகளை வாடகைக்கு எடுப்பதற்கு தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் அது 12 சதவிகிதமாக மாறுவதால் வாடகை குறையும் வாய்ப்பு உள்ளது.
மருத்துவ உபகரணங்கள்
பிற எலும்பு முறிவு உபகரணங்கள், உடலின் செயற்கை பாகங்கள், குறைபாடு அல்லது இயலாமைக்கு ஈடுசெய்ய அணியும் அல்லது உடன் எடுத்துச் செல்லப்படும் அல்லது உடலில் பொருத்தப்பட்ட பிற உபகரணங்கள், உள்விழி லென்ஸ் ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைகிறது. எனவே இவற்றின் விலை குறையும்
GST Rate Hike on Daily Essential Items from July 18, What to Get Costlier, What’s Cheaper
GST Rate Hike on Daily Essential Items from July 18, What to Get Costlier, What’s Cheaper | ஜூலை 18 முதல் ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் மாற்றம்.. உயரும், குறையும் பொருட்கள் என்னென்ன?