வாகனங்களில் பதிக்கப்பட்டிருக்கும் வசனங்கள் எப்போதும் மக்களை கவர்வதை தவறாது. குறிப்பாக ஆட்டோக்களில் முன்பெல்லாம் “சீறும் பாம்பை நம்புங்கள்.. சிரிக்கும் பெண்ணை நம்பாதீர்” , ”பிரசவத்திற்கு இலவசம்” என எழுதப்பட்டிருக்கும்.
அதேபோல, குடித்துவிட்டு வண்டி ஓட்டக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் ”லைட்டை போட்டு வண்டி ஓட்டு, லைட்டா போட்டு வண்டி ஓட்டாதே” எனவும், ’வண்டி ஓட்டுவதற்கே பறப்பதற்கு அல்ல’ போன்ற வசனங்களும் இடம்பெற்றிருக்கும்.
இதுப்போன்று பல வசனங்கள், வாசகங்கள் சிரிப்பலை ஏற்படுத்தவும், சிந்திக்கவும் வைக்கும். அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த ஆட்டோக்காரர் ஒருவர் தனது ஆட்டோவின் பின்னால் ஹார்ன் அடிப்பது வலிக்கிறது என தலைப்பிட்டு (HONKING HURTS) அதிக ஒலி எழுப்பும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் எழுதியிருக்கிறார்.
Brilliant. On a three-wheeler in Delhi. pic.twitter.com/ikLsUqCst9
— Tunku Varadarajan (@tunkuv) July 11, 2022
அதில், டிராஃபிக்கில் இருக்கும்போது ஹார்ன் அடித்தால் என்ன நடக்கும்? எனக் கேள்வி எழுப்பி அதற்கு 4 தேர்வுகளையும் கொடுத்திருக்கிறார். அதில், 1) சிக்னல் சீக்கிரத்தில் பச்சைக்கு திரும்பும் , 2) சாலை விரிவடையும், 3) வாகனங்களெல்லாம் பறக்கக்கூடும் , 4) எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான படத்தை வரதராஜன் என்ற பயனர் ட்விட்டர் ஷேர் செய்து, புத்திசாலித்தனமான முன்னெடுப்பு என கேப்ஷன் இட்டு பதிவிட்டிருக்கிறார். அந்த ட்வீட் நான்காயிரத்துக்கும் மேலானோரால் பகிரப்பட்டு பலரது வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM