Doctor Vikatan: பிறந்த குழந்தையின் கண்களில் மை தீட்டலாமா?

பிறந்த குழந்தைகளுக்கு கண்களில், புருவங்களில் மை தீட்டுவது, பவுடர், லோஷன் உபயோகிப்பதெல்லாம் எந்த அளவுக்கு சரியானது? மை தீட்டினால்தான் புருவங்கள் அடர்த்தியாக வளரும் என்கிறார்கள். அது உண்மையா?

எஸ். ஸ்ரீநிவாஸ்

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்

குழந்தைகளின் சருமம் மிக மென்மையானது. எனவே அவர்களது சருமத்துக்கு குளியல் பொடி, மஞ்சள் பொடி, பவுடர் போன்றவற்றை உபயோகிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவற்றை உபயோகிப்பதால் குழந்தையின் சருமம் வறண்டு போகவும், சிவந்துபோகவும், அரிப்பு, எரிச்சல் ஏற்படவும், அலர்ஜிக்கு உள்ளாகவும் கூடும். புண்களும் நோய்த்தொற்றும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

Baby

குழந்தைகளைக் குளிக்க வைக்க சோப் உபயோகிப்பதற்கு பதில், சோப்பை போலவே இருக்கும் ‘சிண்டெட் பார்’ (Syndet bar) உபயோகிக்கலாம். இது குழந்தையின் சருமத்தை சுத்தமாகவும் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

குழந்தைகளுக்குத் தலைக்குக் குளிப்பாட்டுவதாக இருந்தால் அவர்களின் கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தாத, குழந்தைகளுக்கான பிரத்யேகமான, தரமான ஷாம்பூவை உபயோகிக்கலாம். மற்றபடி சோப்பு, அரப்புத்தூள், சீயக்காய்த்தூள் போன்றவற்றை எல்லாம் பயன்படுத்தக்கூடாது.

சில குழந்தைகளின் சருமம் வறட்சியுடன் காணப்படும். அதற்கு எண்ணெய் தடவும் பழக்கம் பலரிடம் உண்டு. எண்ணெய்க்கு பதில் ‘எமோலியன்ட் லோஷன் ‘ (Emollient Lotion) உபயோகிக்கலாம்.

Baby powder

குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் கண்களிலும் புருவங்களிலும் மை தீட்டக் கூடாது.  பெரும்பான்மையான கண் மைகளில் காரீயம் கலந்திருக்கும். அதை உபயோகிப்பதால் குழந்தையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தவிர கண் மை உபயோகிப்பதால் குழந்தையின் கண்களில் எரிச்சல், சிவந்து போவது, கண்ணீர் வருவது, ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். எனவே கண் மையைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.