கோத்தபய மாலத்தீவு தப்பி ஓட்டம்: இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்

கொழும்பு,

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

மக்கள் போராட்டம்

அன்னியச்செலாவணி இல்லாமை, விஷம்போல நாளும் ஏறிவரும் விலைவாசி, எரிபொருட்கள் தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு என பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்க, இனியும் பொறுப்பதற்கு இல்லை என்ற நிலையில் இலங்கை மக்கள் வெகுண்டெழுந்தனர். அவர்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கினர். நாட்டை இப்படியொரு நெருக்கடியில் தள்ளிவிட்டதற்கு ராஜபக்சே குடும்பத்தார்தான் காரணம் என ஒருமித்த குரலில் நாட்டுமக்கள் குற்றம் சாட்டி, அவர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அவர்கள் பதவி விலக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

முதலில் ராஜபக்சே சகோதரர்களில் இளையவரான நிதி மந்திரி பசில் ராஜபக்சே ஏப்ரல் 3-ந்தேதி பதவி விலகினார். அடுத்து போராட்டம் வலுத்து மோதலாக வெடித்தபோது பிரதமர் மகிந்த ராஜபக்சே மே 9-ந்தேதி பதவி விலகினார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்தார்.

புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே மே 12-ந்தேதி பதவி ஏற்றபோதும், அந்த நாட்டின் பொருளாதார நிலையில் எந்த மாற்றமும் இல்லாததால் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்தது. நாடு திவாலாகி விட்டதாக பிரதமர் ரணில் விக்ரம சிங்கே கடந்த வாரம் அறிவித்தார்.

அதிபர் மாளிகை சுற்றிவளைப்பு

இந்த சூழலில், கடந்த 9-ந்தேதி (சனிக்கிழமை), மக்கள் போராட்டம் உச்சம் அடைந்தது. அன்று, கொழும்பு நகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகை முன் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். அவர்கள் ராணுவ கட்டுப்பாடுகளை மீறினர். தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு என அடக்குமுறைகள் வந்தபோதும், அவற்றுக்கு அடங்காமல் அதிபர் மாளிகையினுள் மக்கள் நுழைந்து, சுற்றிவளைத்தனர். தற்போது அதிபர் மாளிகை, மக்களின் சுற்றுலாத்தலம் போல மாறி இருக்கிறது.

மக்கள் போராட்டம் உச்சம்தொட்டு, அதிபர் மாளிகையை ஆக்கிரமிக்கப்போவது குறித்து, முன்கூட்டியே உளவுத்தகவல் கிடைத்ததால் முந்தைய நாளே இரவோடு இரவாக அதிபர் கோத்தபய ராஜபக்சே, குடும்பத்தினருடன் தப்பினார். தலைமறைவான அவரது இருப்பிடம் தெரியவரவில்லை.

புதிய அதிபர் தேர்தல்

ஒருபுறம் பொருளாதார நெருக்கடியும், மறுபுறம் மக்கள் போராட்டமும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல தாக்க, நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த கோத்தபய ராஜபக்சே, 13-ந்தேதியன்று (நேற்று) பதவி விலகுவதாக ஒருவழியாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து நிலைமை மேலும் மோசமாகி விடாமல் தடுக்கும் வகையில், அரசியல் நடவடிக்கைகள் வேகம் எடுத்தன. அனைத்துக்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தின. நாடாளுமன்றத்தைக்கூட்டி 20-ந்தேதி புதிய அதிபரை தேர்ந்தெடுப்பது என அவை முடிவு செய்தன.

மாலத்தீவு தப்பினார், கோத்தபய

ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக்கொண்டே செல்ல, இனியும் இங்கிருந்தால் ஆபத்து என உணர்ந்த அதிபர் கோத்தபய ராஜபக்சேயும், அவரது தம்பி பசில் ராஜபக்சேயும் வெளிநாட்டுக்கு தப்பி விட முடிவு செய்து கடந்த திங்கட்கிழமை இரவு முயற்சித்தனர். ஆனால் அவர்கள் வெளியேற விமான நிலைய குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஆனால் அதிபர் பதவியை விட்டு ராஜினாமா செய்வதற்கு முன்னதாக, நாட்டை விட்டு தப்பிவிட வேண்டும், அப்போதுதான் அதிபர் என்ற நிலையில் வழக்கு மற்றும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து விடலாம் என கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டார். அதன்படி காய்களை நகர்த்தி, நேற்று அதிகாலை நேரத்தில் அவர், அதிரடியாக தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு விமானப்படை விமானத்தில் தப்பினார். அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் மாலத்தீவு தலைநகர் மாலேயை சென்று அடைந்தனர். இதை இலங்கை விமானப்படை தெரிவித்தது.

இதையொட்டி இலங்கை விமானப்படை வெளியிட்ட அறிக்கையில், “அரசு கேட்டுக்கொண்டதின்படியும், அரசியல் சாசனத்தின்படியும், அதிபருக்கு உள்ள அதிகாரங்களின் அடிப்படையில், ராணுவ அமைச்சகத்தின் முழுமையான அனுமதியுடன், அதிபர், அவரது மனைவி, 2 பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மாலத்தீவு செல்வதற்காக இலங்கை விமானப்படை விமானம் வழங்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது. மாலேயில் கோத்தபய குடும்பத்தினரை வரவேற்ற அரசு அதிகாரி, அவர்களை தக்க பாதுகாப்புடன் ரகசிய இடத்துக்கு அழைத்துச்சென்றார்.

மாலத்தீவின் முன்னாள் அதிபரும், இந்நாள் சபாநாயகருமான முகமது நஷீத் உதவியால்தான், மாலத்தீவுக்கு கோத்தபய குடும்பம் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இடைக்கால அதிபர் ஆனார், ரணில்

அதைத்தொடர்ந்து மாலத்தீவில் இருந்தவாறே பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயை நாட்டின் இடைக்கால அதிபராக நியமித்து அதிபர் கோத்தபய உத்தரவிட்டார். அரசியல் சாசனத்தின் பிரிவு 37(1), இதற்கான அனுமதியை அதிபருக்கு அளித்துள்ளது.

இந்த பிரிவு, நாட்டின் அதிபர் உடல்நலம் இல்லாமல் போனாலோ, நாட்டில் இல்லாமல் போனாலோ அதிபருக்கான அதிகாரங்களை, கடமைகளை, நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்வதற்கு வகை செய்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயை இடைக்கால அதிபராக அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார் என்ற தகவலை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே முறைப்படி வெளியிட்டார்.

அவசர நிலை பிரகடனம்

அடுத்த சில நிமிடங்களில் ரணில் விக்ரமசிங்கே. நாட்டில் போராட்டங்களை ஒடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்தார். நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார்.

இதையொட்டி அவர் டெலிவிஷனில் தோன்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் நாட்டில் இப்போது அவசர நிலையையும், ஊரடங்கையும் அறிவிக்கிறேன். பாசிச சக்திகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது.

நாட்டில் இயல்பு நிலையை கொண்டுவருவதற்கு அவசர நிலையையும், (மேற்கு மாகாணத்தில்) ஊரடங்கையும் அமல்படுத்துமாறு பாதுகாப்பு படைகளை அறிவுறுத்தி உள்ளேன். எந்த அரசியல் தலையீடும் இன்றி இதை செய்வதற்கு ஆயுதப்படைகளின் தலைவர்களை கொண்ட குழுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துக்கட்சி அரசு உருவாகிறபோது நான் பதவியை விட்டு விலகுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, வன்முறையில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறு பாதுகாப்பு படைகளுக்கு ரணில் விக்ரம சிங்கே உத்தரவு பிறப்பித்தார்.

பிரதமர் அலுவலகம் சுற்றிவளைப்பு

இதற்கிடையே அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பம் நாட்டை விட்டு தப்பிவிட்ட தகவல், நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. மக்கள் கோபாவேசம் கொண்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பு காலே முக திடலில் கூடினர். “போராட்டம் வெற்றி” என முழங்கினர். “கோத்தபய வீட்டுக்கு போ” என கோஷமிட்டனர்.

பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயின் அலுவலகம் நோக்கியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாய் படையெடுத்தனர். அவர்கள் ரணில் விக்ரம சிங்கே பதவி விலக கோரினர். பெருங்கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. ஆனாலும் போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அவர்களை வெளியேற்ற ராணுவத்தினர் நடவடிக்கை எடுத்தனர். இதில் சிலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டி.வி. நிலையத்திலும் போராட்டம்

மேலும், போராட்டக்காரர்கள் இலங்கை அரசின் ரூபவாகினி டெலிவிஷன் நிலையத்திற்குள் புகுந்தனர். ரணில் விக்ரம சிங்கே பதவி விலகுமாறு முழங்கினர்.

இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால் ஒளிபரப்பு சிறிது நேரம் முடங்கியது.

ஆனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஓரளவு இயல்பு நிலை அங்கு திரும்ப, மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது.

சிங்கப்பூருக்கு தப்ப முயற்சி

கோத்தபய ராஜபக்சே அமெரிக்கா செல்லவே முதலில் விரும்பியதாகவும், ஆனால் அந்த நாடு விசா அளிக்க மறுத்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவிலும் எதிர்ப்பு வலுத்தது. அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. போராட்டமும் நடந்தது. இதையடுத்து அவர், குடும்பத்தினருடன் சிங்கப்பூருக்கு செல்லும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.