புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2006ம் ஆண்டிற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக மாகியை சேர்ந்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளை முடித்து, 6 மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, கடந்தாண்டு மார்ச் மாதம், மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
ஐகோர்ட்டில் வழக்கு
அதனையொட்டி, மாநில தேர்தல் ஆணையர் தாமஸ், கடந்தாண்டு செப். 22ம் தேதி, மூன்று கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் வார்டு மறு சீரமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு செய்ததில் குளறுபடி உள்ளதாக கூறி, பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட மூவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற்று, சட்ட விதிகளின்படி இட ஒதுக்கீடு செய்து தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டனர்.
மறு அறிவிப்பு
அதனையேற்ற மாநில தேர்தல் ஆணையம், கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்ட பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கான அறிவிப்பை ரத்து செய்தது.தொடர்ந்து, கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலில் பின்பற்றிய நடைமுறையின்படி, பொது, பெண்கள் மற்றும் எஸ்.சி., இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றி, கடந்தாண்டு அக்டோபர் 8ம் தேதி மீண்டும் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீட்டை நீக்கியதை கண்டித்து தி.மு.க., சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், தேர்தல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.அதே நேரத்தில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தல் குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால், உச்சநீதிமன்றத்தை நாட அறிவுறுத்தினர்.
அதனையேற்று வழக்கை திரும்பப் பெற்று, தி.மு.க., தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.அங்கு, வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதி மன்றத்திலேயே தீர்வு காண அறிவுறுத்தினர். அதனையேற்று வழக்கை திரும்பப் பெற்று, கடந்த மார்ச் மாதம் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இதற்கிடையே, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கோவா மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பொதுநல வழக்கில், அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்திட, மாநில தேர்தல் ஆணையங்களை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.மேலும், இவ் வழக்கின் தீர்ப்பின் முழு விபரங்களையும் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு அனுப்பி வைத்தது.அதேநேரத்தில் புதுச்சேரி தி.மு.க., சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்று ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
டில்லியில் முகாம்
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்திட உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடைந்ததோடு, நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் முடிவடைந்து விட்டது.இதனால், நீதிமன்ற அவமதிப்பை தவிர்த்திட, மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் கடந்த ஒரு வாரமாக டில்லியில் முகாமிட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.இதனால், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்