கோவை மாவட்டம் திருச்சி சாலை மேம்பாலத்தின் 40 அடி உயரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேம்பாலம் திறக்கப்பட்ட 2 மாதங்களில் இது மூன்றாவது உயிரிழப்பாகும்.
கோவை மாவட்டம் ஒப்பணக்கார வீதி பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆனந்தகுமார், ஒண்டிபுதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று வழக்கம்போல பணிக்கு ஒண்டிபுதூர் நோக்கி திருச்சி மேம்பாலத்தின்மீது அவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார். அப்போது சுங்கம் பகுதியின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி 40 அடி உயரத்திலிருந்து வாகனத்திலிருந்து தூக்கி கீழே வீசப்பட்டார். இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் பாலத்தின் மீதிருந்து கடந்த மாதம் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மேம்பாலம் திறக்கப்பட்ட அடுத்தநாளே இளைஞர் ஒருவர் தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பாலம் திறக்கப்பட்ட 2 மாதத்திற்குள் 3 உயிரிழப்புகள் நிகழ்ந்துவிட்ட நிலையில் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர்களை சற்று உயரமாக அமைக்க வேண்டும் அல்லது கோவை 100 அடி சாலையை இணைக்கும் பாலத்தில் அமைக்கப்பட்டு உள்ளதுபோல் கம்பி வேலி தடுப்புகள் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே மாதத்தில் 3 உயிர்களை பலிவாங்கிய மேம்பாலம்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM