வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் பயன்படுத்தும் மிக முக்கியமான பொருள், தொலைக்காட்சி. ஆனால், அதனை சுத்தம் செய்யும் வேலையை எடுத்துக்கொள்ள வீட்டில் முன்வருபவர்கள் யார்? பல வீடுகளிலும் தூசி, அழுக்கு என்று படிந்துபோயிருக்கும் தொலைக்காட்சி திரை.
டிவி திரையை சரியான முறையில் சுத்தம் செய்யாத பட்சத்தில் அதில் கீறல்கள் விழுவதற்கும், திரையில் வேறு ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டாகிவிடும். எனவே, திரைக்கு எந்த பாதகமும் ஏற்படாமல் டிவியை எப்படி சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
* எப்போது தொலைக்காட்சியை சுத்தம் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு முன்னதாக திரையை மட்டுமல்லாது, தொலைக்காட்சிக்கு வரும் மொத்த மின்சாரத்தையும் நிறுத்த வேண்டும். இதனால் மின்விபத்துகளைத் தவிர்க்கலாம்.
* டிவியை ஆஃப் செய்த பின், திரை கறுப்பாக இருக்கும்போதுதான் அதில் படிந்துள்ள தூசிகள் தெளிவாகத் தெரியும் என்பதாலும், டிவியை ஆஃப் செய்த நிலையில்தான் சுத்தம் செய்ய வேண்டும்.
* தொலைக்காட்சியின் திரையில் அமோனியா, ஆல்கஹால் அல்லது அசிட்டோன் கொண்ட சுத்தம் செய்யும் திரவங்களை பயன்படுத்தக் கூடாது.
* எந்த கேட்ஜெட் க்ளீனிங் லிக்விட் ஆக இருந்தாலும், நேரடியாக திரையில் ஸ்பிரே செய்து துடைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் திரையில் அந்த திரவத்தின் அடையாளம், சுத்தம் செய்த அடையாளம் தங்கிவிடும். திரையும் பாதிப்படையக் கூடும். ஒரு சில திரைகள் நீர்/திரவம் படுவதால் வேலை செய்யாமல் போகவும் வாய்ப்புள்ளது.
* திரையை சுத்தம் செய்ய ஸ்பிரேயை பயன்படுத்துபவர்கள், அதை மென்மையான துணியில் ஸ்பிரே செய்து, அந்தத் துணியைக் கொண்டு திரையை மெதுவாகத் துடைத்து சுத்தம் செய்யலாம்.
* LCD, OLED, பிளாஸ்மா அல்லது பழைய CRT டிஸ்பிளேவாக இருந்தாலும், டிவி திரையை சுத்தம் செய்ய மைக்ரோ ஃபைபர் துணியைப் பயன்படுத்துதல் நல்லது. டிவி திரையை சேதப்படுத்தாமலும், கைரேகைகள் மற்றும் தூசி, அழுக்கை சுத்தம் செய்யவும் இந்த வகை துணிகள்தான் சிறப்பானவை.
* டிவி திரையை சுத்தம் செய்யும்போது, முதலில் ஒரு திசையில், செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக துடைக்க வேண்டும், அடுத்ததாக, எதிர் திசையில் செய்ய வேண்டும். இதனால் திரையில் எந்த இடமும் விடுபடாமல் சுத்தம் செய்ய முடியும்.
* துணியில் துடைக்கும்போது, ஒரு கட்டத்துக்கு மேல் பின்பக்கம் திருப்பித் துடைக்கவும். இல்லையெனில், துடைத்ததால் துணியில் ஒட்டியிருந்த தூசி மீண்டும் திரைக்குச் சென்றுவிடும்.
* திரையை சுத்தம் செய்து முடித்தபின் உடனே திரையை ஆன் செய்யாமல் சிறிது நேரம் காய விடவும். அதன் பின் திரையை ஆன் செய்யவும்.