அதிமுகவின் சின்னமான இரட்டை இலைக்கு சொந்தக்காரர் பன்னீர்செல்வம் மட்டுமே! துரோகத்தின் வரலாற்றை எழுதினால் சிலுவம்பாளையம் பழனிசாமி மட்டுமே என ஒபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர் புகழேந்தி அவரை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
’’அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த புதிய நிர்வாகிகள் நியமனம் செல்லாது. அதிமுகவில் அவர் இல்லை; அவருக்கும் அதிமுகவிற்கும் சம்மந்தம் கிடையாது. ஆடியோவை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பொன்னையன் அதிருப்தியில் உள்ளார். அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். இன்னும் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
ஒரு புரூட்டஸ், ஒரு யூதர் என துரோகத்தின் வரலாற்றை எழுதினால் சிலுவம்பாளையம் பழனிசாமி தான் அடுத்து. இது உலகத்திற்கே தெரியும். இதுவரை ஒபிஎஸ் எதுவும் தவறாக பேசி உள்ளாரா?’’ என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து ’’எடப்பாடி பழனிசாமி ஒரு கொலை குற்றத்தில் இருந்து வெளியே வந்தவர்தான். பன்னீர்செல்வத்தோடு எடப்பாடி பழனிசாமியை இணைத்து பேச முடியாது. மேலும் கடந்த 2017 ஆண்டு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் வழங்கியது மறைந்த மதுசூதனன், பன்னீர்செல்வம் மற்றும் செம்மலைக்குத்தான். அதில் இடையீட்டு மனுவாக உள்ளே வந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஆகையால் இரட்டை இலைக்கு சொந்தகாரர் பன்னீர்செல்வம் மட்டுமே’’ என புகழேந்தி தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM