நான் ஜூபிடர் பிக்சர்ஸ்ல ஆபீஸ் பையனா வேலை செஞ்சதி லிருந்தே கலைவாணர் என்.எஸ்.கே -வுக்கு என்னை நல்லா தெரியும். அப்பப்ப எனக்கு ஊக்கம் கொடுத்தவர் அவர்.
‘பணம்’ படத்துல இசையமைப்பாளர் பெயர் போடற பிரச்னை வந்து, சர்ச்சை கிளம்பின அந்த நேரத்துல அவர் என்னைக் கூப்பிட்டாரு.
“பரவாயில்லேடா… நீ சின்னப்பையன்… ராமமூர்த்தி பெரியவரு… அனுபவசாலியான அவர் உனக்குப் பின்னால இருந்து பத்திரமா தாங்கிப் பிடிச்சுப்பாரு… அதனால ‘விஸ்வநாதன் – ராமமூர்த்தி’னே டைட்டில்ல போடலாம்… “னு ரொம்ப உரிமையோட உத்தரவே போட்டாரு. இதையேதான் எல்லாருமா ஆமோதிச்சாங்க.
இந்தப் படத்துலேருந்து நானும் ராமமூர்த்தி அண்ணாவும் இணைந்து ‘ஹிட் பாடல்களைத் தரத்துவங்கினோம். இந்த நேரத்துல, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் கே.ஆர்.ராமசாமியை ஹீரோவாகப் போட்டு ‘சுகம் எங்கே?’ன்ற படத்துக்கு இசையமைக்க டி.ஆர்.சுந்தரம் எங்களை வரச்சொன்னார். நாங்களும் போனோம். கவிஞர் கண்ணதாசன்தான் எங்களை டி.ஆர்.சுந்தரத்துக்கு அறிமுகம் செய்து வெச்சார்.
அப்போ சுந்தரம் “ஓஹோ… இந்தப் பசங்கதான் விஸ்வநாதன் – ராமமூர்த்தியா? சரி, நாம இந்திப்பட டியூன்லாம் கொடுத்துப் போடச் சொல்வோமே, இவங்க போடுவாங்களா?”னு கேட்டார்.
“மன்னிக்கணும்… நாங்க சொந்தமா தான் டியூன் போடுவோம்… இந்தி டியூன்லாம் நிச்சயமா நாங்க போடமாட்டோம். விருப்பமிருந்தா எங்களை வெச்சுக்குங்க… இல்லாட்டி விட்டுடுங்க…”னு கறாரா நாங்க சொல்லிட்டோம்.
கண்ணதாசன், “இவங்களையே போட்டுக்கலாம்”னு சிபாரிசு பண்ணாரு. எங்களையே மியூஸிக் டைரக்டரா போட்டாங்க.
‘சுகம் எங்கே?’ படத்துக்கு டைரக்டர் கே.ராம்நாத். நாங்க கம்போஸ் பண்ண அஞ்சு பாட்டையும் போட்டுக் கேட்க அவரைக் கூப்பிட்டோம். அதுக்கு ராம்நாத், “நான் எதுக்குக் கேட்கணும்?
கவிஞர் பாட்டு எழுதிக் கொடுத்திட்டா ரில்ல… அது பிடிச்சு மியூஸிக் போட்டுட்டாங்கல்ல… மியூஸிக் நல்லா வந்திருக்கில்ல… காட்சிக்கு ஏற்ப நீங்க போட்டா சரி…. அதுக்கேத்த மாதிரி நான் படம் எடுத்துக் கொடுக்கணும்… அவ்வளவுதான்…. “னு வரவே மாட்டேனுட்டாரு. இதுக்கு முக்கிய காரணம் என்னன்னா பாட்டை கவிஞர் எழுதணும். அந்தப் பாட்டுக்கு மியூஸிக் டைரக்டர் கம்போஸ் பண்ணணும். இதுக்கு தகுந்த காட்சியை டைரக்டர் எடுக்கணும். ஆக, அவங்க அவங்க டிபார்ட் மெண்ட்டைக் கவனிச்சுக்கிட்டாலே போதும்கிறது ராம் நாத் சாரோட கருத்து. இந்தப் படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடி, நாங்க இசையமைச்ச அஞ்சு பாடல்கள் தவிர, ‘டாக்ஸி டிரைவர்’ங்கிற இந்திப் படத் தோட்டியூன் போட்ட பாட்டையும் எங்களை டெஸ்ட் பண்ற மாதிரி சேர்த்து விட்டாங்க. படம் ரிலீஸாச்சு. நாங்க போட்ட பாட்டுங்கதான் ஹிட்! அந்த இந்தி டியூன் பாட்டு, அம்போ!
மாடர்ன் தியேட்டர்ஸ், ஏவி. எம். போன்ற பெரிய பட கம்பெனிகள் பாப்புலர் இந்தி டியூன்களைக் கொடுத்து அதையே தமிழ்ல போடச் சொல்லி இசையமைப்பாளர்களை இம்சைப்படுத்துவாங்க. அப்படி இருந்த ஒரு வழக்கத்தை ப்ரேக் பண்ணவங்க விஸ்வநாதன் ராமமூர்த்தியாகிய நாங்கதான்!’ ஹிட் சாங்ஸ்’ கொடுத்ததால எங்க மேலே மதிப்பேற்பட்டு, மாடர்ன் தியேட்டர்ஸ் அவங்க அடுத்த படம் – பாசவலைக்கும் எங்களையே ஒப்பந்தம் பண்ணாங்க. படம் ஒரு மியூஸிகல் சப்ஜெக்ட், அதனால் பாட்டுக்கள் எல்லாம் நல்லா வரணும்னு சொல்லிட்டாங்க.
மறுபடியும் சேலத்துல காம்ப் – ‘பாசவலை’ படத்துக்காக. ஒரு நாள் மாடர்ன் தியேட்டர்ஸ் மானேஜர் சுலைமான் என்கிட்ட வந்தாரு…
“பையன் ஒருத்தன் வந்திருக்கான்…. பாட்டெல்லாம் நல்லா எழுதுவானாம்…. நான் நம்ம படத்தோட சில சிச்சுவேஷன் சொல்லியிருக்கேன்… அவன் பாட்டு எழுதிக்கொண்டு வந்திருக்கானாம்…” என்று சுலைமான் சொன்னாரு.
எனக்கு ‘பாசவலை’ படத்தோட கதை மனப்பாடமே ஆயிடுச்சி… நான் விஷூவலாவே மனசுக்குள் படமே பார்த்துட்டேன்.
நான், “சுலைமான்… எங்களுக்கு ஏற்கெனவே கைவசம் நிறைய படங்கள் இருக்கு… இந்தப் படத்துக்காக இங்கே இருக்கப்போறது ஆறே நாள்தான்…. மெட்ராஸ்ல வேற நிறைய வேலை இருக்கு…. கண்ணதாசன், மருதகாசி யாரையாவது எழுதச் சொல்லுங்க… இப்ப புதுசா பாட்டெழுதறவங்களைப் பாக்கறதுல எல்லாம் எங்க டைமை வேஸ்ட் பண்ண முடியாது….”னு கொஞ்சம் அகந்தையோட சொன்னேன்.
அந்தப் பையன் போயிட்டு அடுத்த நாளும் வந்தான். “என்னங்க…. அந்தப் பையன் நல்லாவே பாட்டு எழுதியிருக்கான்… அதைக் கொஞ்சம் படிச்சுத்தான் பாருங்களேன்… நல்லா இருந்தா கூப்பிடுங்க… நல்லா இல்லேன்னா நானே அனுப்பிச்சிடறேன்…” என்றார் சுலைமான்.
“சரி… சரி… அந்தப் பாட்டை வாங்கிட்டு வாங்கனு சொன்னேன். அந்தப் பாட்டை படிச்சேன். குட்டி ஆடு தப்பி வந்தாகுள்ள நரிக்குச் சொந்தம்… குள்ள நரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்… தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்…. சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்…’
இன்னிக்கும் எனக்குப் பசுமையா நினைவில் இருக்கு . நேத்து ரிக்கார்ட் பண்ண பாட்டோட வரிகள்லாம் இன் னிக்கு ஞாபகத்துக்கு வரலை . ஆனா கிட்டத்தட்ட 32 வருஷத்துக்கு முன்னாடி எழுதப்பட்ட பாட்டோட வரிகள் இவை.
இந்தப் பாட்டைப் படிச்சுட்டு நான் அசந்து போயிட்டேன்.” இப்படி ஒரு கவிஞன் இருக்கானா ? உடனே அவனை வரச்சொல்லுங்க சார்…’ னு சுலைமான் கிட்ட சொன்னேன்.
என் எதிரில் வந்து நின்ன அந்த இளைஞன் பனைமர உசரத்துக்கு இருந் தான் . அந்த இளைஞன்தான் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் . அவனை அப்படியே உட்கார வெச்சு , அந்தப் பாட்டு கொடுத்த இன்ஸ்பிரேஷன்ல பத்தே நிமிஷத்துல அதுக்கு டியூன் போட்டுட்டேன் .
அன்னிக்கு சாயந்தரம் – மாடர்ன் தியேட்டர்ஸ்ல ஒரு பூஜை ரூம் உண்டு . அதுக்குள்ள போயிட்டுக் கதவைச் சாத்திட்டு சாமி படங்கள் முன்னால் – “ஆண்டவா… நான் எப்படிப்பட்ட தவறு செய்துட்டேன்…” னு சுவத்தில மோதி அழுதேன்.
‘ஏண்டா விஸ்வநாதா… அதுக்குள்ள உனக்கு அவ்வளவு திமிர் வந்துடுச்சா? அறிவு கெட்டவனே. நீ பெரிய ஆள்னு நினைப்பா… கவிதை எழுதி வந்தவன் கிட்ட என்ன இருக்குனு தெரியாம திருப்பி அனுப்பற அளவுக்கு உனக்கு அவ்வளவு கொழுப்பாடா…?’னு என்னை நானே திட்டிக்கிட்டுக் கண்ணீர் விட்டேன். ராத்திரி சாப்பிடாம உண்ணா விரதம் இருக்கறதுனு முடிவு பண்ணிப் பட்டினி கிடந்தேன் . தூக்கமே இல்லை . என்னை நானே வருத்திக்கிட்டேன் .
அந்தப் படத்துல இன்னும் சில பாடல்கள் எழுத சான்ஸ் கொடுத்தேன். இது முடிஞ்சவுடனே, கல்யாணசுந்தரத்தைக் கையோட மெட்ராஸுக்கு அழைச்சிக்கிட்டு வந்தேன். டைரக்டர் பீம்சிங்கிட்டே அறிமுகம் செஞ்சு வெச்சேன்.
அப்பதான் நான், டைரக்டர் பீம்சிங், கதாசிரியர் சோலைமலை, தயாரிப்பாளர் வேலுமணி – எல்லாரும் சேர்ந்து’ பதிபக்தி’ படம் தயாரிக்க முடிவு செய்தோம். ‘பதிபக்தி’ – எங்கள் ‘ப’ வரிசைப் பட ஆரம்பம்…
(12.12.1993 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)