மேட்டூர்: மேட்டூர் அணை நீர் மட்டம் 111.30 அடியாக உயர்ந்துள்ள நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
டெல்டா பாசனத்துக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், காவிர ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று காலை 98,208 கன அடியாக இருந்த நீர் வரத்து, மாலை 4 மணிக்கு 1,00,153 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை 80,270 கன அடியாக குறைந்தது. மாலை 4 மணிக்கு 73,029 கன அடியாக நீர் வரத்து மேலும் சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் திறப்பு, மாலை 20 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும், நீர் திறப்பு குறைவாக உள்ளதால், அணை நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணை நீர் மட்டம் நேற்று 106.70 அடியாக இருந்தது, இன்று காலை 110.14 அடியாக இருந்தது, மாலை 111.30 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 85.12 டிஎம்சி-யாக உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி: மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஆகஸ்ட் 1-ம் தேதி கால்வாய் பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டு அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதால், கால்வாய் பாசனத்துக்கு குறித்த நாளில் நீர் திறக்கப்படும் மகிழ்ச்சியில் விவசாயிகள் உள்ளனர்.
மேட்டூர் அணையின் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனம் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,433 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,377 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. கிழக்கு கரை கால்வாய் பாசனம் மூலம் 27,000 ஏக்கரும், மேற்குகரை கால்வாய் பாசனம் மூலம் 18,000 ஏக்கரும் என மொத்தம் 43 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
ஆண்டுதேறும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதிவரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி நீர் கால்வாய் பாசன விவசாய நிலத்துக்கு தேவைப்படும். பாசனப்பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே பாசனத்துக்கான நீர் தேவை குறையும். நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால், குறித்த நாளான ஆகஸ்ட் 1-ம் காலவாய் பாசனத்துக்கு நீர் திறக்க வாய்ப்புள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.