வானியலின் அற்புதங்கள் – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சாதித்தது என்ன?

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினுடைய ஆராய்ச்சிகளின் சிகரமாகக் கருதப்படுவது ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (James Webb Space Telescope). இந்தத் தொலைநோக்கி, கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

அதன் பின்பு 15 லட்சம் கி.மீ. விண்ணில் பயணித்து, நிலைபெற்றது. ஆறு மாத காலமாக அறிவியலாளர்களின் இடைவிடாத கூட்டுமுயற்சியால், ஜேம்ஸ் வெப்பிடமிருந்து தற்போது ஐந்து ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன!

பெருவெடிப்புக்குப் (big bang) பின்னர் உருவான முதல் விண்மீன்கள் (first stars), புவியைப் போன்ற உயிர்வாழச் சாத்தியமுள்ள புறக்கோள்கள் (exoplanets) உள்ளிட்டவற்றைப் பற்றிய கேள்விகளுக்கு இதன் மூலம் விடை காணத் தொடங்கலாம். ஜேம்ஸ் வெப் செலுத்தப்படுவதற்கு முன்பாக, ஹப்பிள் (Hubble) விண்வெளித் தொலைநோக்கி முக்கியத்துவம் பெற்றிருந்தது.

மிகக்குறுகிய நானோமீட்டரில் தொடங்கி பல கி.மீ.க்கு அகன்றது வரையிலான அலைநீளம் கொண்ட பல்வேறு ஒளி அலைநீளங்களில், கண்ணுறு ஒளியை (visible light) உள்வாங்கும் திறனைக் கொண்டது அது. விண்வெளி ஆய்வில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தக் காரணமாக இருந்தது ஹப்பிள். ஆனால், பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன்களையும், பல்வேறு கூறுகளையும் அறிந்துகொள்ள வேண்டுமென்றால், கண்ணுறு ஒளியை மட்டும் படம்பிடித்தால் போதாது.

விண்பொருள்கள் கண்ணுறு ஒளியை மட்டும் வெளியிடுவதில்லை. அவை அகச்சிவப்புக் கதிர்களாக (infrared rays) வெப்பத்தை வெளியிடும்.

விரிவடைந்துகொண்டே போகும் பிரபஞ்சத்தில், விண்பொருள்களும் சிறிதுசிறிதாக நம்மை விட்டு விலகிச் செல்லும். அப்போது அவற்றிலிருந்து வெளிவரும் ஒளியின் அலைநீளம் நம்மை வந்தடையும்போது அதிகரித்துவிடும். அதாவது, சிறிய அலைநீளம் கொண்ட கண்ணுறு ஒளியின் அளவிலிருந்து, அகச்சிவப்புக் கதிரின் அலைநீளத்துக்கு அவை மாறியிருக்கும்.

பெருவெடிப்புக்குப் பின் உருவான முதல் விண்மீன்கள், கோள்கள் பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ளன. அவற்றை ஆராய வேண்டுமென்றால் அதிக அலைநீளம் கொண்ட அகச்சிவப்புக் கதிர்கள் தேவை.

நீர் மூலக்கூறுகள் அகச்சிவப்புக் கதிரின் குறிப்பிட்ட அலைநீளத்தை உள்வாங்கக்கூடியவை. ஒரு கோளிலிருந்து வெளிவரும் மொத்த அகச்சிவப்புக் கதிர்களில், நீர் மூலக்கூறுக்குப் பிடித்த அலைநீளத்தில் எதுவும் கிடைக்கவில்லை என்றால், அந்தக் கோளில் நீர் இருக்கிறது என்று அர்த்தம்.

ஓர் அறையில் இனிப்பும் காரமும் இருக்கும் தட்டை வைத்துவிட்டு, மறுநாள் போய்ப் பார்க்கும்போது இனிப்பைக் காணவில்லை என்றால், அங்கே எறும்பு இருக்கிறது என்று அர்த்தமாகும் இல்லையா? எறும்பு தனக்குப் பிடித்த இனிப்பை மட்டும் எடுத்துக்கொள்வதுபோல, நீர் மூலக்கூறுகள் அகச்சிவப்புக் கதிர்களில் குறிப்பிட்ட அலைநீளத்தை எடுத்துக்கொள்கின்றன. ஆக, பல கோடி வருடங்களுக்கு முன்பிருந்த ஒரு கோளில் நீர் இருந்ததா, அதன் மூலம் வேறு உயிர்கள் அங்கே இருந்துள்ளனவா என்பதை அறிந்துகொள்ள அகச்சிவப்புக் கதிர்களை உள்வாங்கும் தொலைநோக்கிகள் தேவை.

இது போன்ற பல்வேறு அறிவியல் அடிப்படைத் தேவைகளுடன், 0.6 – 28.3 மைக்ரோமீட்டர் வரை அலைநீளம் கொண்ட அகச்சிவப்புக் கதிர்களைப் படம்பிடிக்கும் வகையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வடிவமைக்கப்பட்டது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப்பின் ஐந்து ஒளிப்படங்கள் முதல்படிதான். தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மனிதர்கள் செல்பி எடுத்துத் தள்ளுவதைப் போல் இல்லாவிட்டாலும், பிரபஞ்சத்தைத் தினம்தினம் படம் பிடித்து மேலும் பல ரகசியங்களை ஜேம்ஸ் வெப் வெளிக்கொணர இருக்கிறது. வானியலின் அற்புதங்களை அறிவியலால் உய்த்துணர்வதற்குக் காலம் கனிந்திருக்கிறது.

> இது, இஸ்ரேல் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் இ.ஹேமபிரபா எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.