இந்தியா: குரங்கு அம்மை நோய் பாதிப்பு எதிரொலியாக அனைத்து மாநிலங்களையும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
குரங்கு அம்மை நோய் பாதிப்பு எதிரொலியாக அனைத்து மாநிலங்களையும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூசன் அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் “50 நாடுகளில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி வரை 3,411 பேருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உலக சுகாதார அமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 86 சதவீத பாதிப்பு ஐரோப்பிய கண்டத்திலும், 11 சதவீத பாதிப்பு அமெரிக்காவிலும் ஏற்பட்டுள்ளது.
குரங்கு அம்மை பாதிப்பிற்கு நாடுகளுடைய பட்டியலிடப்பட்ட நிலையில் அந்த நாடுகளில் இருந்து மாநிலங்களுக்கு வரக்கூடிய பயணிகளை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ய வேண்டும். குரங்கு அம்மை நோய் குறித்து பரிசோதனை செய்யும் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
குரங்கு அம்மை இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு கட்டாயமாக குரங்கு அம்மை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் குடல் புண் நோய் உள்ளிட்ட இணை நோய்கள் இருந்தால் உடனடியாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் உயிரிழப்புகளை தடுக்கலாம்.
ஏதேனும் மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். குரங்கம்மை நோய்க்கான சிகிச்சைகள் மேற்கொள்ள தேவையான அளவு படுக்கை வசதிகள் மருத்துவர்கள் செவிலியர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
கரோனா பெருந்தொற்று உள்ள சூழலிலும் வேறு நோய்கள் வந்தாலும் அதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.