தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் ஒரு குறிப்பிட்ட நகராட்சியொன்றில், அரசு அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யும்போது சிரிக்கவேண்டும் என்றும், அவ்வாறு செய்யத்தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அந்தப் பகுதியின் மேயர்.
பிலிப்பைன்ஸின் கியூசான் மாகாணத்தில் உள்ள முலனாய் நகராட்சி மேயர் அரிஸ்டாட்டில் அகுயர், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வேலைசெய்யும் அரசு அதிகாரிகளுக்கு, இந்த `புன்னகைக் கொள்கை’யைப் பின்பற்றுமாறு வித்தியாசமான உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார்.
இதன்படி அரசு அதிகாரிகள், மக்களுக்கு சேவை செய்யும்போது, அமைதி மற்றும் நட்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக சிரித்தபடி இன்முகத்துடன் இருக்க வேண்டும் என்று மேயர் உத்தரவிட்டிருக்கிறார்.
ஒருவேளை மக்களுக்கு சேவை செய்யும்போது சிரிக்கத் தவறினால் அதிகாரிகள்மீது ஒழுங்கு நடவடிக்கையாக, 6 மாத சம்பளத்துக்கு இணையான அபராதம் விதிக்கப்படலாம் அல்லது வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்படலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்துப் பேசிய மேயர் அரிஸ்டாட்டில் அகுயர், “உள்ளூர்வாசிகள், பெரும்பாலும் மீனவர்கள் மற்றும் தென்னை விவசாயிகள். இவர்கள் தொலைதூர கிராமங்களிலிருந்து டவுன்ஹாலுக்கு, ஊழியர்களிடம் வரி செலுத்த அல்லது உதவிபெறச் செல்லும்போது, அதிகாரிகளின் அணுகுமுறையால் அவர்கள் திகைக்கிறார்கள். இது தொடர்பான புகார்களும் எழுந்தன. எனவே இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” எனக் கூறினார்.
ஒரு வித்தியாசமான முயற்சியாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டாலும், பிலிப்பைன்ஸ் மக்கள் இன்னும்கூட பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய சூழல் இருக்கும்போது, இந்தத் உத்தரவு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.