புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகளை சோனியா, ராகுல் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றினர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய நிறுவனத்துக்கு கொடுத்த கடனுக்காக இந்த பங்கு பரிமாற்றம் நடந்தது. இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்க பிரிவு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 13, 14, 15, 20 மற்றும் 21ம் தேதிகளில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. மொத்தம் 60 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது. ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதே நேரத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த மாதம் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்க துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் ஆஜராகவில்லை. பின்னர் ஜூலை மாதமும் அவர் கூடுதல் அவகாசம் கோரியிருந்தார். விசாரணைக்கு ஆஜராவதை சில வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு சோனியா காந்தி கடிதம் எழுதினார். இந்நிலையில் வரும் 21ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்று டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 18ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தும் வாய்ப்பை காங்கிரஸ் எம்.பி.க்கள் பயன்படுத்தி கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜுன் கார்கே, ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு புலி. அவர் பயப்பட மாட்டார். இது போன்ற பல விஷயங்களை அவர் ஏற்கனவே சந்தித்துள்ளார்’ என்றார்.