இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருவரும் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். நாளுக்குள் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துவருவதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே, தன் மனைவியுடன் மாலத்தீவுக்குத் தப்பிச்சென்றுவிட்டார்.
மாலத்தீவிலும் அவருக்கெதிரான போராட்டம் வலுக்க, கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சவுதி அரேபியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருப்பது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம், “இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, எங்களிடம் அடைக்கலம் தருமாறு எதுவும் கேட்கவில்லை. தனிப்பட்ட முறையிலான பயணமாகத்தான் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் வந்திருக்கிறார். மேலும் சிங்கப்பூர், அவருக்கு அடைக்கலம் தரவில்லை” என விளக்கமளித்திருக்கிறது.
முன்னதாக ஜூலை 13-ம் தேதியே அதிபர் பதியிலிருந்து விலகுவதாக கோத்தபய ராஜபக்சே தன்னிடம் தெரிவித்ததாக, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியிருந்தார். ஆனால் கோத்தபய ராஜபக்சே, அதிகாரபூர்வமாக இதுவரை தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. இருப்பினும், நேற்றிலிருந்து இலங்கையின் இடைக்கால அதிபராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயல்பட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.