கன்னட நடிகர் மீது துப்பாக்கி சூடு
கன்னட திரையுலகில் குணசித்ர நடிகராக இருப்பர் சிவரஞ்சன். அமிர்தா சிந்து, வீர பத்ரா போன்ற கன்னடப் படங்களில் சிவரஞ்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெலகாவியில் உள்ள பைல்ஹோங்கல் நகரில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு பழைய ஹனமந்தா தேவா கோயிலுக்கு அருகில் உள்ள அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் கும்பல், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. ஆனால், அவர் சுதாரித்துக் கொண்டதால் அவர் மீது துப்பாக்கி குண்டுகள் பாயவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த கும்பலை விரட்டவே, அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். 3 ரவுண்ட் துப்பாக்கி சூடு நடந்திருப்பதாகவும், சொத்து பிரச்சினை தொடர்பாக சிவரஞ்சனின் உறவினர்களே இதில் ஈடுபட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.