The Gray Man – Avik San: "அமைதியாக இருப்பான், சீரியஸாக சண்டையும் போடுவான்!"- தனுஷ் வேடம் எத்தகையது?

‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’, ‘எண்டு கேம்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர்கள் ரூஸோ ப்ரதர்ஸ் (ஆண்டனி & ஜோ) இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘The Gray Man’. முழுக்க முழுக்க ஆக்ஷன்-திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இப்படத்தில், தனுஷ் ‘அவிக் சான்’ (Avik San) என்னும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் உலகின் சிறந்த அசாசின்களில் (Assassin) ஒருவராக நடித்துள்ளார். இப்படம் அமெரிக்காவில் ஜூலை 15 அன்று குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து 22-ம் தேதி, உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் வெளியீட்டையொட்டி நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் தனுஷ், ஹாலிவுட்டில் பணியாற்றிய அனுபவங்கள், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள், தான் நடிக்கும் ‘அவிக் சான்’ கதாபாத்திரம் எப்படிபட்டது என ஏராளமான விஷயங்களைப் பற்றிப் பகிர்ந்துக்கொண்டார்.

The Gray Man குறித்து தனுஷ்

இது பற்றி விரிவாக பேசிய அவர், “நிறைய ஹாலிவுட் படங்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். இப்போது அந்த ஹாலிவுட்டில் நடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹாலிவுட் திரையுலகம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றி புரிந்துகொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்குக் கிடைத்தது.

இந்தியத் திரையுலகில் சுமார் 50 படங்களில் நடித்திருக்கிறேன், கிட்டத்தட்ட 22 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். எனவே அங்கு நான் ஒரு புதிய நடிகர் போல பணியாற்ற வாய்ப்புகள் கிடைக்காது. ஆனால் இங்கு அவை அனைத்தும் தலைகீழாக மாறியிருந்தது. ஒரு புதிய நடிகராக என்னை நானே சரிப்படுத்திக்கொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பு இப்படத்தின் மூலம் என்னக்குக் கிடைத்துள்ளது” என்றார்.

The Gray Man பட போஸ்டர்கள்

மேலும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் தன்னுடைய ‘அவிக் சான்’ கதாபாத்திரம் பற்றிக் கூறிய அவர், “ஒன்றரை மாதம் பயிற்சிகள் முடிந்து, படப்பிடிப்புத் தொடங்க ஒரு வாரம் இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக என் கழுத்தில் சுளுக்கு (Sprain) ஏற்பட்டவிட்டது. அப்போது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் படப்பிடிப்புத் தொடங்க ஒரு வார காலம் அவகாசம் இருந்து. அதற்குள் பிசியோதரப்பி எடுத்துக்கொண்டேன். அதன்பிறகு சண்டைக் காட்சிக்காக என்னைத் தயார் செய்தார்கள்.

இப்படத்தில் நான் நடித்திருக்கும் ‘அவிக் சான்’ என்னும் கதாபாத்திரம் மிகவும் சீரியஸாகவும் அதேசமயம் கட்டுக்கோப்பாகவும் இருக்கும் கதாபாத்திரம். அமைதியாக இருக்கும், அதேசமயம் சீரியஸாக சண்டையும் போட வேண்டும். இது மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது” என்றார்.

இதனிடையே தனுஷின் கதாபாத்திரம், படத்தில் நடிக்கும் ரியான் கோஸ்லிங் மற்றும் ஆனா டி ஆர்மஸ் ஆகியோருடன் ஆக்ரோஷமாகச் சண்டைப்போடும் காட்சி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.