“எங்களைக் கொலைசெய்ய ப்ளான் பண்ணார்; அதனால அவரைக் கொலைசெஞ்சோம்!" – கொலையாளிகள் பகீர் வாக்குமூலம்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர், நாடார் மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து மரிய நிர்மலாதேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மரிய நிர்மலாதேவி, ஆறுமுகநேரி பேரூராட்சியில் 14-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

கொலையான சரவணகுமார்

சரவணக்குமாருக்கு ஆறுமுகநேரி அருகில் உள்ள அம்மன்புரத்தில் சொந்தமாக நிலங்கள் உள்ளன. நேற்று (13-ம் தேதி) காலை, தன் மனைவியின் பைக்கில் அங்குள்ள ஒரு டீக்கடைக்குச் சென்றுள்ளார். அபோது ஒரே பைக்கில் வந்த 3 பேர், சரவணகுமாரை அரிவாளால் வெட்ட வந்தனர். அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்வதற்காக அருகில் உள்ள ஒரு வாய்க்காலில் குதித்தார். ஆனால், அவரால் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முடியவில்லை.

இதனையடுத்து 3 பேர் கொண்ட கும்பல், சரவணகுமாரின் தலை, வயிறு மற்றும் கைகளில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதனால், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் உயிரிழந்தார். சரவணகுமார் கொலையின் எதிரொலியாக ராணிமகாராஜபுரம், அம்மன்புரம் ஆகிய பகுதிகளில் பதற்றம் நிலவியதால் பாதுகாப்பிற்காகப் போலீஸார் குவிக்கப்பட்டனர். இவரின் கொலைக்கான காரணம் என்ன, கொலையாளிகள் யார் என குரும்பூர் காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலைச் சம்பவம் நடந்த பகுதியில் ஒரு சி.சி.டி.வி கேமராகூட இல்லாததால் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க போலீஸார் சற்று திணறினர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்

சரவணக்குமாரின் தம்பி வேல்குமார் கடந்த 2019-ல் கொலைசெய்யப்பட்டார். அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் சரவணகுமாரையும் கொலைசெய்தார்களா அல்லது ராணிமகாராஜபுரத்தில் உள்ள இசக்கியம்மன் கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையா? நிலத்தகராறுதான் காரணமா என்றெல்லாம் போலீஸார் விசாரணையை மேற்கொண்டரனர். இந்த பிரச்னைகளில் சம்பந்தப்பட்டவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

சரவணகுமாரின் தம்பி வேல்குமாரை நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் ராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்தச் சேர்ந்த கேசவன், பழையகாயலைச் சேர்ந்த முத்துச்செல்வன் ஆகிய இருவரும் கொலைசெய்தனர். இதனால், ஏற்பட்ட முன்விரோதமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் போலீஸார் கேகவன், முத்துச்செல்வனிடம் விசாரணை மேற்கொண்டனர். சரவணகுமாரை கொலைசெய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். போலீஸாரின் விசாரணையில், “சரவணகுமாரோட தம்பி வேல்குமாரை நிலப்பிரச்னையால் கொலைசெஞ்சோம். எங்களை பழிக்குப்பழி கொலைசெய்வேன்னு சரவணகுமார் சொல்லிட்டு இருந்தார். அவரிடம் ஊர்ல சிலர் சமாதானம் பேசுனாங்க. இருந்தாலும் எங்களை கொலைசெய்யணும்கிறதுல உறுதியா இருந்தார்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட எஸ்.பி பாலாஜி சரவணன்

கூலிப்படையை ஏவி எங்களைக் கொலைசெய்யுறதுக்கு அவர் ப்ளான் போட்டார். அதை அவரோட கூட இருக்குற சிலர் எங்ககிட்ட சொன்னாங்க. எங்களைக் கொலைசெஞ்சுடக்கூடாதுன்னு நாங்க முந்திக்கிட்டு அவரைக் கொலைசெஞ்சுட்டோம்” என்று கூறியிருக்கின்றனர். கேகசன், முத்துச் செல்வனுடன் கொலைக்கு உடந்தையாக இருந்த திருப்பதி பாண்டியன், சிவபெருமாள் என்ற சிவா ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட 4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.