அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி; விலை உயரும் அபாயம்: போராட்டம் அறிவித்த அரிசி ஆலை அதிபர்கள்

Mill Association announces protest to revoke 5% GST to packed Rice: பொது மக்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நசுக்கும் வகையில் மத்திய அரசு மனிதனின் அத்தியாவசிய உணவுத் தேவையான அரிசிக்கு வரி விதித்து இருப்பது வேதனை அளிக்கின்றது. இதனை கண்டித்து தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் சிவானந்தன் இன்று திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: 

இதையும் படியுங்கள்: அ.தி.மு.க தொண்டர்கள் இடையே சாதிச் சண்டையை மூட்டி விட முயற்சி: டி.டி.வி தினகரன் திடீர் புகார்

கடந்த மாதம் 28 மற்றும் 29-ம் தேதி சண்டிகர் மாநிலத்தில் நடந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அரிசிக்கு 5- சதவீதம் வரி விதிப்பதாக மத்திய அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தியாவை பொறுத்த வரை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது தினசரி உணவில் கோதுமை மற்றும் அரிசியை பிரதானமான உணவாக பயன்படுத்தி வருகின்றனர். இவ்விரண்டும் மக்களுக்கு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் மூலம் பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் பைகளின் தரத்தில் இருந்து அதில் எவ்வாறு லேபிள் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல ஷரத்துகளை வரையறுத்துள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தரமான உணவு கிடைக்க இச்சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசாங்கம், தற்போது அவ்வாறு பேக்கிங் செய்யப்பட்டுள்ள உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி என்று கூறியது ஏற்புடையதாக இல்லை.

மேலும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு நடுத்தர மக்கள் ஏழையாகிவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் நிலையில், அரிசிக்கும், கோதுமைக்கும் 5% வரி விதித்து ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மேலும் ஒரு சுமையை மத்திய அரசாங்கம் ஏற்படுத்த கூடாது.

மத்திய அரசு அரிசிக்கு 5 சதவீதம் வரிவிதிப்பு செய்தால் அரிசி கிலோவுக்கு 2 முதல் 3 ரூபாய் விலை உயரும். இந்த விலை உயர்வு பொதுமக்கள் மீது சுமையாக விழும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே மத்திய அரசு உடனடியாக அரிசிக்கு விதித்துள்ள 5 சதவீத வரி விதிப்பை நீக்க வேண்டும்.

இல்லையென்றால் வருகிற 16-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 3000 மில் ஆலைகள் ஒன்று சேர்ந்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

க. சண்முகவடிவேல் 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.