“இந்தியா – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து" – அமைச்சர் எ.வ.வேலு தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பாம்பன், ராமேஸ்வரம், அரிச்சல்முனை பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள், பள்ளி கல்வித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசும்போது, “பாம்பன் கால்வாய் மற்றும் அதன் அணுகு பகுதிகள், புதியதாக கட்டப்பட்டு வரும் ரயில் தட தூக்கு பாலம், கப்பல்கள் பயணிக்கவிருக்கும் வழித்தடங்கள், பாம்பன் கால்வாய் பகுதியில் புதியதாக கட்டப்பட உள்ள நான்கு வழிச்சாலைக்கான வழித்தடங்கள், பாம்பன் கால்வாயை 10 மீட்டர் ஆழப்படுத்துவதற்கு சுற்றுப்புற சூழல் மற்றும் தொழில்நுட்ப பொருளாதார சாத்திய கூறு அறிக்கையின்படி தூர்வார உத்தேசித்துள்ள பகுதிகளை நேரடியாக ஆய்வு மேற்கொண்டேன்.

சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் தாக்க மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கையுடன் சேர்த்து, சுற்றுச்சூழல் மற்றும் கடலோர விதிமுறை மண்டலம் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். மேலும், இத்திட்டத்தினை மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் நிதியுதவியுடன் 10 மீட்டர் ஆழத்திற்கு தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறு மற்றும் நடுத்தர கப்பல்கள், கடற்படை மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் கிழக்கு-மேற்காக பயணிக்க ஏதுவாக அமையும்.

மாவட்ட ஆட்சியரிடம் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் எ.வ.வேலு

ராமேஸ்வரம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய பகுதியாகும். அவ்வாறு கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதனை அடுத்து உள்ள தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை பகுதிக்கு கண்டிப்பாக சென்று சுற்றி பார்த்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதியினை கருத்தில் கொண்டு அதிநவீன வாகன நிறுத்துமிடம் மற்றும் கழிவறை வசதிகள் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் ராமேஸ்வரம் (இந்தியா) மற்றும் தலைமன்னார் (இலங்கை) இடையேயான தூரம் சுமார் 26 கடல் மைல்கள் (48 கிலோ மீட்டர்) ஆகும். சுமார் 13 கடல் மைல் வேகத்திறன் கொண்ட 150 முதல் 300 பயணிகள் பயணிக்கும் பயணிகள் கப்பல் சுமார் 2 மணி நேரத்தில் தலைமன்னார் துறைமுகத்தை சென்றடைய இயலும். 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட ராமேஸ்வரம் தலைமன்னார் இடையேயான இந்த இந்திய-இலங்கை கப்பல் போக்குவரத்து 1984 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டால் சாதாரண நடுத்தர மக்களும் பயணிக்க ஏதுவாக இருப்பதோடு இந்தியா மற்றும் இலங்கை இடையிலான சிறு குறு வர்த்தகம் மேம்பட பெருமளவில் வழிவகுக்கும். மேலும் ராமேஸ்வரம் தீவு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளின் சமூக பொருளாதார வசதிகள் மேம்பட வழிவகுக்கும். இதனை மீண்டும் செயல்படுத்த முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டம்

தற்போது ராமேஸ்வரம் சிறு துறைமுக பகுதியில் பயணிகள் கப்பல் தோணித்துறை வசதிகள் ஏதும் இல்லை, புதிதாக இந்த தோணித்துறை அமைப்பதற்கு ஏற்ற சாத்தியமான இடம் கோதண்ட ராமர் கோயில் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ளது. இந்த அணுகு தோணித்துறையில், பயணிகள் இறங்குமிட வசதி, சுங்கத்துறை அலுவலகம், குடியுரிமை அலுவலகம், சுகாதாரத் துறை அலுவலகம் ஆகியவைகளை உள்ளடக்கிய பகுதியாக நவீன வசதியுடன் ஏற்படுத்துவதற்கான ஆய்வு செய்யப்பட்டது. இந்த கப்பல் போக்குவரத்து மூலமாக அயல்நாட்டுப் பயணிகள் வருக இருக்கும் என்பதால், இத்துறைமுக வசதியை மேம்படுத்துவதற்கு மத்திய அரசின் அனுமதி மற்றும் ஒப்புதல் மிக அவசியம் தேவைப்படுகிறது. இதற்காக ராமேஸ்வரம் துறைமுகத்தின் கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு கடல்சார் வாரியம் உடனடியாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் அக்னி திருத்தகடல் பகுதியில் நடத்தப்பட்டு வரும் பயணிகள் படகு போக்குவரத்தினை ஆய்வு செய்தேன். இப்படகு போக்குவரத்தினை ஆண்டுதோறும் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பயன்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பயணிகள் படகு போக்குவரத்து பகுதியினை மேலும் விரிவாக்கம் செய்வதோடு இதே போன்று ராமேஸ்வரம் தீவினை சுற்றியும் மேலும் சில பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய பயணிகள் படகு போக்குவரத்தினை தொடங்குவதற்கு சாத்திய கூறுகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.