மேலும் 44 பேரை கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவிப்பு: முழுப் பட்டியல்

அதிமுக கட்சியில் உள்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் சிக்கலாகிவரும் நிலையில், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 44 பேரை ஓ.பன்னீர் செல்வம் கட்சியிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
யார் அந்த 44 நபர்கள்?:-
அந்த அறிக்கையில், முன்னாள் அமைச்சர் சி. விஜய பாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், கீர்த்திகா முனியசாமி, ஆர்.எஸ். ராஜேஷ், டி.ஜி. வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, சோமசுந்தரம், திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், சிட்லப்பாக்கம் ச ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பென்ஜமின், அலெக்ஸாண்டர், மாதவரம் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, எஸ்.ஆர்.கே அப்பு, வேலூர் வேலழகன், திருப்பத்தூர் வீரமணி, ராணிப்பேட்டை ரவி, திருவண்ணாமல தூசி கே. மோகன், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ் கிருஷ்ண மூர்த்தி, கடலூர் கே.ஏ. பாண்டியன், கடலூர் அருண் மொழித் தேவன், சேலம் வெங்கடாச்சலம், ஈரோடு ராமலிங்கம், ஈரோடு கருப்பணன், திருப்பூர் மகேந்திரன், கோவை அம்மன் கே அர்ச்சுணன், கோவை அருண் குமார், நீலகிரி கப்பச்சி டி வினோத், முன்னாள் அமைச்சர் திருச்சி பரஞ்சோதி, திருச்சி குமார், முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சர் எம். விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர் காமராஜ், மயிலாடுதுறை பவுன்ராஜ், புதுக்கோட்டை பி.கே. வைரமுத்து, சிவகங்கை செந்தில்நாதன், ராமநாதபுரம் முனியசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், கன்னியாகுமரி ஜாண் தங்கம், புதுச்சேரி ஏ. அன்பழகன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
பரபரப்பு காரணம்: –
இவர்கள், கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் வகையில் செயல்பட்ட காரணத்தாலும் அதிமுக கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் உள்கட்சி பிரச்சினை விஸ்வரூபம் பெற்றுவருகிறது.
அதிமுக அலுவலகத்துக்கு சீல்:-
சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு ஒபிஎஸ்-இபிஎஸ் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தனித்து செயல்பட ஆரம்பித்தனர். இந்த நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு ஓ. பன்னீர் செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் அதிமுகவில் நிகழ்ந்த வன்முறையால் கட்சி தலைமையகம் பூட்டுப் போட்டு சீல் வைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் நீக்கம்:-
இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வத்தை, எடப்பாடி பழனிசாமியும், எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர் செல்வமும் கட்சியை விட்டு நீக்கியுள்ளனர்.
இந்தக் களோபரத்துக்கு மத்தியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவும் அதிமுக கட்சியை சொந்தம் கொண்டாடிவருகிறார்.
ஒ.பன்னீர் செல்வம் இன்று (ஜூலை15) கட்சியை விட்டு நீக்கியுள்ள 44 பேரில், சி. விஜய பாஸ்கர், எஸ்.பி. சண்முகநாதன், எம். விஜய பாஸ்கர், பரஞ்சோதி, பென்ஜமின், பி.வி. ரமணா, அக்ரி எஸ் கிருஷ்ண மூர்த்தி மற்றும் காமராஜ் ஆகியோர் முன்னாள் அமைச்சர்கள் ஆவார்கள்.

முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்; எம்.பி., ரவீந்திரநாத் மற்றும் அவரது சகோதரர் ஜெய் பிரதீப் உள்பட சிலரை எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.