1976-ல் பயன்பாட்டுக்கு வந்த திருச்சி காவிரி பாலம் பராமரிப்புக்காக மூடப்படவிருக்கிறது இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
திருச்சி மாநகரில் இருந்து ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1976-ல் அகன்ற புதிய பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் பயன்பாட்டில் இருந்தாலும் சமீப காலமாக காவிரி பாலத்தில் ஆங்காங்கே சாலையின் நடுவே இருக்கும் இரும்பு கம்பிகள் பெயர்ந்தும், ஒவ்வொரு தூணுக்கும் இணைப்பாக இருக்கக்கூடிய பகுதிகளில் பள்ளங்கள் விழுந்தும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த பாலத்தில் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள், பேருந்துகள், வேன், கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் என பல்வேறு வகையான வாகனங்கள் சென்று வருகின்றன.
சில ஆண்டுகளாக பாலத்தை தாங்கும் தூண்களில் ஏற்பட்ட இடைவெளி மற்றும் விரிசல் காரணமாக வாகன போக்குவரத்துக்கு அவ்வப்போது இடையூறு ஏற்பட்டது. இந்த பாலம் சீரமைப்பு பணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் ரூ.1 கோடியே 35 லட்சமும், 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.35 லட்சமும், செப்டம்பரில் ரூ.15 லட்சமும், 2018-ம் ஆண்டு நவம்பரில் ரூ.80 ஆயிரமும் செலவிடப்பட்டது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியின்போது, நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தபோது, பாலம் கட்டப்பட்டு 46 ஆண்டுகள் முடிந்துவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளாலும் பாலத்தை உடனடியாக முழுமையாக சீரமைக்க வேண்டியது கட்டாயம் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்பின் பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு காவிரிப் பாலத்தின் அருகிலேயே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய காவிரி பாலத்தை அகற்றி விட்டு காவிரியில் புதிய பாலம் கட்ட ரூ.130 கோடியை தமிழக அரசு நிர்வாக ரீதியாக அனுமதித்திருக்கின்றது. அதேபோல் தற்போது போக்குவரத்திற்கு பயன்பட்டு வரும் காவிரி பாலத்தில் ரூ.6.87 கோடியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அனுமதித்தது.
இந்தநிலையில், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், திருச்சி காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை முன்னிட்டு போக்குவரத்தை மாற்றி அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவிரி பாலம் பராமரிப்பு பணிகளைத் தொடங்கி விரைந்து முடித்திடவும், மக்களுக்கு போக்குவரத்திற்கு இடையூறின்றி மாற்று வழியில் செல்வதற்கான ஆலோசனைகளையும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; திருச்சி காவிரி பாலம் பேரிங் மாற்றி சரி செய்யப்பட உள்ளது. இதனால் 5 மாதங்களுக்கு இந்த பாலத்தின் வழித்தடத்தை பயன்படுத்த முடியாது. தற்காலிகமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பணிகள் நடைபெற உள்ளதால் வேறு வழித்தடத்தில் போக்குவரத்து எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர், காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மேம்பாலத்தின் விரிவான திட்ட அறிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின்படி புதிய பாலத்திற்கு 8 மாத கால அவகாசம் விடப்பட்டுள்ளது. அதில் தற்போது பாலத்தின் கீழ் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்ற வேலைகள் இன்னும் 5 மாதத்தில் நிறைவடையும். இந்த புது பாலம் 40 ஆண்டுகள் தாங்கும் சக்திக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.
காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்படவிருக்கும் நிலையில் திருச்சி மாநகரின் சிந்தாமணியில் இருந்து செல்லும் வாகனங்கள் ஓடத்துறை, ஓயாமரி வழியாக சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக சென்று மீண்டும் அதே வழியில் வாகன போக்குவரத்தை துவக்கிட மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வினையும் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் செய்துள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் காவிரி பாலத்தை பராமரிப்பு பணிக்காக மூடும்போது திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் உள்ள காவிரி பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் சூழல் ஏற்படும். ஏற்கனவே கடுமையான போக்குவரத்து மிக்க அந்த பாலத்தில் மாநகர வாகன ஓட்டிகளும் பயன்படுத்தும்போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். அதேபோல் விபத்துகளும் அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது.
மேலும், அரை கிலோ மீட்டரில் ஸ்ரீரங்கத்திலிருந்து மாநகரை சென்றடையும் வாகன ஓட்டிகள் சில கிலோ மீட்டர் சுத்தி மாநகரை சென்றடையும் சூழலால் பள்ளி-கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிப்படைவர்.அதேபோல் பேருந்துகளும் கட்டண உயர்வினை உயர்த்திட வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுகின்றது. இதனால் அன்றாடம் பேருந்தில் பயணிப்போர் கடும் சிரமத்திற்குள்ளாவர்.
ஆகவே, திட்டமிடுதலில் தெளிவும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் எனவும், அதேநேரம் காவிரி பாலத்தை சீரமைக்கும் போது ஒரு பகுதியில் இலகு ரக வாகங்களை அனுமதித்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் இருந்து மீளலாம் என சமூக ஆர்வலரும், சாலைப் பயனீட்டாளர் நல அமைப்பின் நிர்வாகி அய்யாரப்பன் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்