சென்னையில் காமராஜரின் திருவுருவச்சிலைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட சாதி தொடர்பான சர்ச்சை கேள்விக் குறித்து பேசினார். “திமுகவை தோற்றுவித்த பெரியாரின் பெயர், ஒரு பல்கலைக்கழகத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இது மாதிரியான செயல்கள் நடக்கிறது என்றால் அவர்கள் எந்த சமூக நிதியை பேசுகிறார்கள் என்று கேள்வி எழுகிறது. மேலும் அங்கு உள்ள பேராசிரியர்கள் எந்தவித மனநிலையில் உள்ளனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற நிகழ்வுகள் வருத்தம் அளிக்கிறது” என்றவர், “அதிமுக உட்கட்சி பிரச்னைக்கு தீர்வு காண்பது அந்த தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் இடையே இருக்கின்ற பிரச்னை. இது தொடர்பாக பாஜக கருத்து சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.
திமுக அமைச்சர்களுக்கு பிடித்த பொழுது போக்கு செல்லமாக அடிப்பது, தட்டுவது. தமிழகத்தில் மட்டும் தான் இப்படி செல்லமாய் தட்டுவதை பார்க்கிறோம். ஒரு பேப்பரை எடுத்து தலையில் வைத்து டம்முன்னு ஒரு கொட்டு கொட்டுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி இது குறித்து கேட்டதற்கு செல்லமாக அடித்தோம் என சப்ப கட்டு கட்டுகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் திமுக அமைச்சர்களுக்கு அதிகாரத் திமிர் வந்துள்ளது.
மேலும் அதற்கு எடுத்துக்காட்டாக தா.மு அன்பரசன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர், கடலூரில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்பி ஆகியோரின் செயல்கள் உள்ளது. அதிகார மமதையில் திமுக உள்ளது அதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளது’’ என்றார்.