மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையைச் சேர்ந்த ஒரு தம்பதி, குடும்பப் பிரச்னையில் பிரிந்து வாழ்ந்து லருகின்றனர். அவர்களின் 9 வயது மகள், தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த தாய்க்கு, ஐரோப்பிய நாடான போலந்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது
உடனே குழந்தையுடன் போலந்து செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் இதற்கு குழந்தையின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்படவே விவகாரம் நீதிமன்றம் வரை செல்கிறது.
இந்த வழக்கில் இகுதரப்பு வாதங்களையும் கேட்ட மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் “:தந்தைக்கும், மகளுக்கும் இடையேயான அன்பு மிகவும் சிறப்பான ஒன்று என்பதை மறுக்க முடியாது.
அதேசமயம் குழந்தை முக்கியமா, வேலை முக்கியமா என்பதை முடிவெடுக்கும்படி தாயை கட்டாயப்படுத்த முடியாது. இந்த தம்பதி தனியாக வாழ்ந்து வருகின்றனர். குழந்தை பிறந்ததில் இருந்து தாயுடன்தான் இருந்துள்ளார். வேலையில் இருந்தபோதும், தன் குழந்தையை அவரது தாய் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவே தெரிகிறது.
குழந்தையின் வளர்ச்சி முக்கியம்தான் என்றாலும், தனக்கு கிடைக்கும் நல்ல வேலை வாய்ப்பை இழக்கும்படி தாயை யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. குழந்தையை அந்தத் தாய் சிறப்பாக கவனித்து கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் அந்த பெண்ணின் தாயும், அதாவது குழந்தையின் பாட்டியும் போலாந்துக்கு அவர்களுடன் செல்கிறார். எனவே அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்க முடியாது. அதே நேரத்தில் விடுமுறைகளின்போது குழந்தையை இந்தியாவுக்கு அழைத்து வந்து தந்தையை பார்க்கவும் செய்ய வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.