சென்னை: செல்ஃபி வித் அண்ணாமலை என்ற நிகழ்ச்சி நடத்த எந்தவிட அனுமதியும் வழங்கவில்லை என்று சம்பந்தப்பட்ட கல்லூரிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் “செல்ஃபி வித் அண்ணாமலை” என்ற பெயரில் போட்டி நடைபெறும் என்று விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது.
இதில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, கல்லூரியில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்று சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த எந்த அனுமதியும் தரவில்லை என்று சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதியின்றி கல்லூரியின் பெயரை தவறாக பயன்படுத்துவதாகவும், கல்லூரி முதல்வர் தெரிவித்து இருந்தார்.
எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதி அளிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.