கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடி விட்ட நிலையில் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் மக்கள் உணவு, எரிபொருள், மருந்து மாத்திரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்கள் அந்த நாட்டின் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராடினார். தொடர்ந்து மாளிகைக்குள் நுழைந்தனர். அதே நேரத்தில் அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பினார்.
தொடர்ந்து இலங்கையில் இருந்து தனது மனைவியுடன் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார் அவர். முதலில் மாலத்தீவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இப்போது சிங்கப்பூர் சென்றுள்ளார்.
கோத்தபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி உள்ளார்.புதிய அதிபராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கை அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் விக்ரமசிங்க, சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதாகவும் அதிபரின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளித்துள்ள முக்கிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு புத்துயிர் அளிப்பதாகவும் உறுதியளித்தார்.
‘‘எந்தவொரு வன்முறை மற்றும் நாசவேலைகளையும் கையாள்வதற்கான அதிகாரங்களும் சுதந்திரமும் ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு நான் நூறு சதவீதம் ஆதரவாக இருக்கிறேன். கலவரக்காரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் வித்தியாசம் உள்ளது.’’ எனக் கூறினார்.
இதனிடையே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடி விட்ட நிலையில் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.