பள்ளிக் குழந்தைகள் காலை 7 மணிக்கே பள்ளிக்குச் செல்லும்போது, நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு வர முடியாதா? என உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு லலித் கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான பணி நேரம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். இதில் மதியம் 1 மணி முதல் 2 வரை உணவு இடைவேளை வேறு. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளான யு.யு லலித், ரவீந்திர பட், சுதன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கத்திற்கு மாறாக அதாவது ஒருமணிநேரம் முன்னதாக, இன்று காலை 9.30 மணிக்கு எல்லாம் நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளனர்.
வேறு ஒரு ஜாமீன் வழக்கில் ஆஜராக வந்த மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி இன்றைய தினம் வழக்கு விசாரணை 9.30 மணிக்கு துவங்கி விட்டது ஏன் என வினவினார். அதற்கு நீதிபதி யு.யு லலித், நம் வீட்டு குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் போது, நீதிபதிகளாகிய நாங்களும், வழக்கறிஞராகிய நீங்களும் ஏன் காலை 9 மணிக்கு நீதிமன்ற பணிக்கு வரக்கூடாது? என கேள்வி எழுப்பினார். அவ்வாறு 9 மணிக்கு நீதிமன்ற பணியை துவங்கினால், 11.30 மணிக்கு அரை மணிநேரம் இடைவேளை எடுத்துக்கொண்டு, பின்னர் மீண்டும் பிணியை துவங்கி மதியம் 2 மணிக்குள் பணியை முடிக்கலாம் என்றும் நீதிபதி யு.யு.லலித் தெரிவித்தார்.
இதனை செய்வதன் மூலம் நீதிபதிகளுக்கு மாலையில் அதிக நேரம் கிடைக்கும் என்றும், நீண்டநேர விசாரணை தேவைப்படாத வழக்குகளை விசாரிப்பதற்கு இந்த நேரம் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இன்று முன்னதாகவே துவங்கி விட்ட விசாரணை நேரம் என்பது ஒரு சோதனை மட்டுமே எனவும், இவை வரும் காலத்தில் செயலாக்கம் செய்யப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
நீதிபதி யு.யு.லலித்தின் இந்த பணிநேர மாற்றத்திற்கு, மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி உட்பட அங்கிருந்தவர்கள் வரவேற்பு தெரிவித்தநிலையில், ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, நீதிபதி யு.யு.லலித்தை பார்த்து கூறினார். தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா அடுத்த மாதம் 26-ம் தேதியுடன் பணி நிறைவு பெறவுள்ளார்.
அவருக்கு அடுத்த நிலையில் நீதிபதியாக உள்ள யு.யு.லலித், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதனை முன்னிட்டே இந்த நீதிமன்ற பணி நேரம் மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது. எனினும் நீதிபதி யு.யு. லலித், ஆகஸ்ட் 27-ம் தேதி முதல், நவம்பர் மாதம் 8-ம் தேதி வரை தான், அதாவது குறுகிய கால உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
– டெல்லியிலிருந்து நிரஞ்சன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM