லண்டன்: பிரிட்டன் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் கட்ட தேர்தல் சுற்றில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். பிரதமரை தேந்தெடுப்பதற்கு இன்னும் சில சுற்றுகள் உள்ளன.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்தெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் முதல் சுற்றில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் வென்றிருந்த நிலையில், இரண்டாம் கட்ட சுற்றிலும் அவர் வென்றிருக்கிறார். இரண்டாம் சுற்றில் ரிஷிக்கு 101 வாக்குகள் கிடைத்தன. அவரைத் தொடர்ந்து வர்த்த அமைச்சர் பென்னி மோர்டண்ட் 83 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். வெளியுறவு செயலாலர் லிஸ் ட்ரஸ் 64 வாக்குகள் பெற்றும் மூன்றாம் இடம் பிடித்தார்.
தொடர்ந்து இரு சுற்றுகளில் வெற்றி பெற்றதன் மூலம், பிரிட்டன் பிரதமராகும் வாய்ப்பை நெருங்கி கொண்டிருக்கிறார் ரிஷி என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அடுத்தடுத்த சுற்றுகளில் முடிவுகள் மாறலாம் என்றும் கூறப்படுகின்றது.
இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி, அரசியல் ஆர்வம் காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சில ஆண்டுகள் தீவிரமாக கட்சிப் பணியாற்றிய ரிஷிக்கு, 2014-ல் வடக்கு யார்க்ஷையர் ரிச்மாண்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்டையான ரிச்மாண்டு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி உள்ளார்.