பிரதாப் போத்தன் மறைவு : திரையுலகினர் இரங்கல்
பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(70) வயதுமூப்பு காரணமாக சென்னையில் காலமானார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 12 படங்கள் இயக்கி உள்ளார். தேசிய விருது உள்ளிட்ட பிற விருதுகளையும் வென்றுள்ளார். மறைந்த பிரதாப் போத்தனின் உடல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலர் வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சத்யராஜ்
நடிகர் சத்யராஜ் வெளியிட்ட இரங்கல் வீடியோவில், ‛‛என்னுடைய ஆருயிர் நண்பன், மிகச்சிறந்த இயக்குனர், அற்புதமான நடிகர் பிரதாப் போத்தனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவரது இயக்கத்தில் ஜீவா, மகுடம் என இரண்டு படங்களில் நடித்தேன். அவருடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது. குழந்தை மாதிரி மனது, கலகலவென சிரித்துக் கொண்டே இருப்பார். திடீரென அவரின் மறைவு அதிர்ச்சியாக உள்ளது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கலைத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்
ராதா
நடிகை ராதா வெளியிட்ட இரங்கல் பதிவில், ‛‛பிரதாப் போத்தனின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். ஒரு நபராக, இயக்குனராக, நடிகராக திறமையான நபராக அவரை எப்போதும் நான் பார்க்கிறேன், மதிக்கிறேன். 80களின் ரீ-யூனியன் சந்திப்பில் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஓம் சாந்தி'' என பதிவிட்டுள்ளார்.
|
நகுல்
நடிகர் நகுல் கூறுகையில், ‛‛பிரதாப் போத்தன் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி'' என்றார்.
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ‛‛உங்கள் ஆளுமை என்றும் வாழும். என் இதயம் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் செல்கிறது. உங்களை மிஸ் செய்வோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் பிரதாப் போத்தன் சார்'' என தெரிவித்துள்ளார்.
குஷ்பு
நடிகை குஷ்பு வெளியிட்ட இரங்கல் பதிவில், ‛‛மிகுந்த மனவேதனை அடைந்தேன். பிரதாப் போத்தனின் மறைவு நெஞ்சை பதற வைக்கிறது. ஒரு நல்ல நண்பரை, அற்புதமான மனிதரை, சிறந்த தொழில்நுட்ப வல்லுநரையும், நடிகரையும், வேடிக்கையான மனிதரையும் இன்று காலை இழந்தேன். அவருடன் சில படங்களில் பணியாற்றும் பாக்கியம் கிடைத்தது. நீங்கள் இறுதியாக அமைதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்'' என கூறியுள்ளார்.