உலகை விட்டு கரைந்த ‘என் இனிய பொன்நிலாவே’ – மிரள வைக்கும் பிரதாப் போத்தனின் திரைப் பயணம்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் நேரில் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவர் கடந்து வந்த திரைப் பாதை குறித்து சிறிது பார்க்கலாம்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் பிரதாப் போத்தன். இவருக்கு 15 வயதாக இருக்கும்போது, தொழிலதிபரான இவரது தந்தை உயிரிழந்தார். எனினும், உதகையில் பள்ளி படிப்பையும், சென்னை எம்.சி.சி. கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்த பிரதாப் போத்தன், அதன்பிறகு முன்னணி விளம்பர பட நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். தனது சிறுவயதில் பெயிண்டிங்கில் ஆர்வம் கொண்ட பிரதாப், பின்னர் கல்லூரி காலங்களில்தான் அவருக்கு சினிமா மீது ஆர்வம் வந்துள்ளது.

இதனால் நாடங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். இவரது மூத்த சகோதரரான ஹரியும் சினிமா தயாரிப்பாளராக இருந்துள்ளார். இதனால் வீட்டில் சினிமா பற்றிய பேச்சும் அடிக்கடி எழுந்துள்ளது. அதன்பிறகு, பரதன் இயக்கத்தில் கடந்த 1978-ம் ஆண்டு வெளியான ‘அரவம்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரதாப் போத்தன், அவரது அடுத்தப் படமான ‘தக்காரா’ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர், பாலுமகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரதாப் போத்தன்.

image

எனினும் தொடர்ந்து மலையாளப் படங்களிலேயே கவனம் செலுத்தி வந்த அவர், மீண்டும் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் ‘மூடுபனி’ என்ற படத்தில் சைக்கோவாக நடித்து பெயர் பெற்றார். அதிலும் கதாநாயகியாக நடித்த ஷோபாவுடன், நடு இரவு குளிரில், கையில் கிட்டாருடன் ‘என் இனிய பொன் நிலவே’ என்ற பாடலை இவர் பாடும் விதம், சினிமா ரசிகர்களை எக்காலத்துக்கும் சுண்டியிழப்பதாகவே இருந்தது என்றே கூறலாம். அதன்பிறகு கமல்ஹாசனின் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படமும் கைக்கொடுக்க தமிழ் படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார் பிரதாப் போத்தன்.

image

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரதாப் போத்தான், 1985-ம் ஆண்டு வெளியான ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படம் வாயிலாக இயக்குநராகவும் அறிமுகமானார். முதல்முறையாக அவரே இயக்கி, கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படம் தேசிய விருதையும் பெற்றது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ராதிகாவுடன் காதல் வந்தநிலையில், இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால், மகிழ்ச்சியாக சென்ற திருமண வாழ்க்கை, ஒரே வருடத்தில் 1986-ம் ஆண்டு விவாகரத்திலும் சென்று முடிந்தது.

image

‘மீண்டும் ஒரு காதல் கதை’ படம் மட்டுமில்லாது பிரதாப் போத்தான், கமல்ஹாசனின் ‘வெற்றி விழா’, ‘மை டியர் மார்த்தாண்டன்’, ‘மகுடம்’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘லக்கி மேன்’ உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். சில படங்களில் இயக்குநராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். கடந்த 1978-ம் ஆண்டு முதல் திரையுலகில் பயணித்த அவர், 1997-ம் ஆண்டுக்குப் பிறகு சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டார். ‘பிரியசகி’ படத்தின் மூலம் மீண்டும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் பிரதாப் போத்தன்.

image

இதற்கிடையில் அமலா சத்யநாத் என்பவரை கடந்த 1990-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கேயா என்ற மகள் உள்ளார். பின்னர் 2-வது மனைவியையும் விவாகரத்து செய்தநிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். ரத்த அழுத்தம், சக்கரை நோய்க்காக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். அவரது வீட்டில் பணிபுரியும் மேத்யூ என்பவர் காஃபி கொடுப்பதற்காக இன்று காலை பிரதாப் போத்தனை எழுப்பியபோது, அவர் கண் விழிக்காததால், அப்போலோ மருத்துவமனைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

மருத்துவர்கள் வந்து பார்த்துவிட்டு, பிரதாப் போத்தன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து அவரது மகள் கேயா போத்தன, பிரதாப் போத்தனின் இல்லத்துக்கு வந்தார். மேலும் பிரதாப் போத்தனின் மறைவை கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழ் திரையுலகைச் சேர்ந்த கமல்ஹாசன், பி.சி.ஸ்ரீராம்,
மனோபாலா, Y.G. மகேந்திரன், பூர்ணிமா, சீனு ராமசாமி, நரேன் உள்ளிட்டோர் நேரில் சென்று பிரதாப் போத்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

image

70 வயதான பிரதாப் போத்தனின் இறுதிச்சடங்கு நாளை காலை சென்னையில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இறப்பதற்கு முன்னதாக சமூகவலைத்தளங்களில் காதல், இறப்பு குறித்து கடைசியாக பிரதாப் போத்தன் பதிவுட்டுள்ள பதிவுகளும் வைரலாகி வருகின்றன.

image

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.