கள்ளக்குறிச்சி: மர்மமான முறையில் உயிரிழந்த சின்னசேலம் தனியார் பள்ளியில் படித்த வந்த பிளஸ் 2 மாணவியின் உயிரிழப்பிற்கு காரணவர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் பெற்றோர், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் வேப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்று வந்தார். நேற்று அதிகாலையில் அந்த மாணவி, விடுதியின் 2-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த சின்னசேலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மாணவியின் மரணம் குறித்து இரண்டு பெண் ஆசிரியர்கள் மற்றும் ஆண் ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில், தங்களது மகளின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையைக் கண்டித்தும், மாணவியின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் வேப்பூர் நான்குமுனை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து வேப்பூர் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முழுமையான விசாரணைக்குப் பின் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.